புதுச்சேரியில் மஞ்சள் நிற ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பத்தினருக்கு ஒரு சிலிண்டர் 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அனைத்து எல்பிஜி நுகர்வோருக்கும் அதாவது 33 கோடி இணைப்புகளுக்கு எல்பிஜி சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதே போல பிரதமரின் உஜ்வாலாத் திட்ட நுகர்வோர் சிலிண்டர் ஒன்றுக்கு 200 ரூபாய் மானியத்தை தங்கள் வங்கிக் கணக்கில் தொடர்ந்து பெறுவார்கள்.
பிரதமரின் உஜ்வாலாத் திட்டத்தின் கீழ், 75 லட்சம் கூடுதல் இணைப்புகளுக்கும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் பிரதமரின் உஜ்வாலாத் திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை 10.35 கோடியாக அதிகரிக்கும். இந்த சிலிண்டர் விலை குறைப்புக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் தனது செய்தி குறிப்பில்; புதுச்சேரி மாநிலத்தைப் பொருத்தவரையில் மாநில அரசின் சார்பில் ஏற்கனவே சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.300, மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு ரூ.150, சமையல் எரிவாயு மானியம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசு ரூ.200 மானியம் அளித்திருப்பது. புதுச்சேரி மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. மத்திய அரசின் இந்த விலை குறைப்பை உளமார வரவேற்கிறேன் புதுச்சேரி யூனியன் பிரதேச குடிமக்கள் சார்பாகப் பிரதமருக்கு எனது நன்றி என தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் தற்போது சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.1,115-க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பால் சிவப்பு நிற ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு 500 ரூபாய் குறைந்து ஒரு சிலிண்டர் 615 ரூபாய்க்கும், மஞ்சள் நிற ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பத்தினருக்கு ஒரு சிலிண்டருக்கு 350 ரூபாய் விலையில் சிலிண்டர் விற்பனை செய்யப்படும்.