திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகாவில் உள்ள ஆர்த்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சரோஜா(80). இவர் அந்த பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தை வேலை பார்த்து வரும் இவருக்கு முதியோர் உதவித்தொகை சென்னை அமைந்தகரையில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மாதம் ஒருமுறை சென்னைக்கு வந்து உதவி தொகை பெற்று ஊர் திரும்புவதை வழக்கமாகக் கொண்டு இருந்தார் சரோஜா.
அதேபோல இந்த மாதம் உதவித்தொகை பெறுவதற்காக கடந்த 23ஆம் தேதி சென்னைக்கு வந்த அவர் பணத்தை பெற்றுக்கொண்டு அமைந்தகரை கிருஷ்ணா நகை கடை அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமர்ந்திருந்தார். அப்போது ஆட்டோ ஓட்டி வந்த இளைஞர் ஒருவர் அந்த மூதாட்டியிடம் சென்று அருகில் மார்வாடி வீட்டில் இலவசமாக சேலை வழங்குகிறார்கள். அதோடு பணமும் கொடுக்கிறார்கள் நான் உங்களை அந்த பகுதிக்கு அழைத்துச் செல்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மூதாட்டி சரோஜா இதனை நம்பி ஆட்டோவில் ஏறி இருக்கிறார். போகும் வழியில் இப்படி நகை அணிந்து கொண்டு சென்றால் இலவச சேலை, பணம் உள்ளிட்டவற்றை கொடுக்க மாட்டார்கள். உங்களுடைய நகைகளை கழற்றி கொடுங்கள் ஏழை போல சென்று சேலையை பெற்றுக் கொண்டவுடன் உங்களிடமே அதனை கொடுத்து விடுகிறேன் என்று தெரிவித்துள்ளார். அதன்படி மூதாட்டி தான் அணிந்திருந்த 3 பவுன் நகை, அதோடு தான் வைத்திருந்த 44 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை அந்த ஆட்டோ டிரைவரிடம் கொடுத்து இருக்கிறார்.
இதனையடுத்து சேத்துப்பட்டு ஹாரிங்டன் ரோடு அருகே மூதாட்டியை இறக்கிவிட்டு இங்கேயே காத்திருங்கள் சில நிமிடங்களில் வந்து விடுகிறேன் என்று தெரிவித்து ஆட்டோவில் சென்ற இளைஞர், மறுபடியும் திரும்பி வரவில்லை. நீண்ட நேரம் காத்திருந்த பின்னரும் வராததால் அதிர்ச்சி அடைந்த சரோஜா இது தொடர்பாக கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார்.
அந்தப் புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்த அருகே இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் மூதாட்டி சரோஜாவை ஏமாற்றி நகை, பணம் உள்ளிட்டவற்றை பெற்று தலைமறைவானவர் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் எடப்பாளையத்தை சேர்ந்த சுந்தர் (34)என்பது தெரிய வந்தது. ஆட்டோ ஓட்டுனர் ஆன இவர் பல மூதாட்டிகளை குறி வைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளை அடிப்பதை வழக்கமாகக் கொண்டவர் என்று சொல்லப்படுகிறது.
இவர் மீது ஐ சி எப், வியாசர்பாடி உட்பட 8 காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இத்தகைய நிலையில் தான் சுந்தர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.