தமிழகத்தில் நாள்தோறும் பல்வேறு குற்ற சம்பளம் நடைபெற்று வருகிறது. அதில் பல குற்ற சம்பவங்கள் போதையின் காரணமாகவே நடைபெறுகிறது. இதனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு மதுபான கடைகளை அடைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்துள்ள புதுப்பட்டிணம் உய்யாலிக்குப்பம் இருளர் பகுதியைச் சேர்ந்த செல்லப்பன்(30)என்பவரும், அவருடைய உறவினரான புதுப்பட்டினம் உய்யாலிக்குப்பம் இருளர் பகுதியைச் சேர்ந்த முருகன் (32) உள்ளிட்ட இருவரும் மதுபானம் குடித்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே ஆம்லெட் சாப்பிடுவதில் தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இவர்கள் இருவரும் சண்டையிடுவதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் தான், குடிபோதையில் இருந்த முருகன் ஆத்திரம் காரணமாக, அவருடைய உறவினரான செல்லப்பனை கட்டையால் தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயம் அடைந்த அவர், அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். மதுபோதையில் இரண்டு பேர் சண்டையிட்டு கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்த அந்த பகுதி மக்கள், ஒருவர் மயங்கி விழுந்ததால், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
ஆகவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர்கள் செல்லப்பனை பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது.
ஆகவே அவரது உடலை கைப்பற்றிய கல்பாக்கம் காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவரை கொலை செய்த முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.