சேலம் மாவட்டம் கெங்கவல்லி கிருஷ்ணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் தற்போது நெய்வேலியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு 38 வயதான தவமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், தற்போது இவர்களுக்கு 13 வயதான அருள்குமாரி என்ற மகளும், 10 வயதான அருள் பிரகாஷினி என்ற மகளும், 5 வயதான அருள் பிரகாஷ் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில், கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை தவமணி மற்றும் அவரது குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், தவமணியின் வீட்டிற்க்கு சென்று பார்த்துள்ளனர்.
அப்போது தவமணி மற்று அவரது மூன்று குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், சம்பவம் குறித்து உடனடியாக கெங்கவல்லி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
இதையடுத்து, போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த நான்கு பேரையும் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி 5 வயது அருள் பிரகாஷ் மற்றும் 13 வயது வித்யதாரணியும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 வயதான அருள் பிரகாஷினி மற்றும் மனைவி தவமணி ஆகியோர் உயிருக்கு போராடி வருகின்றனர். .
இதையடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த சேலம் போலீசார், அசோக்குமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், இன்று அதிகாலை நெய்வேலியில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்த அசோக்குமார் தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவி மற்றும் குழந்தைகளை அரிவாளால் வெட்டியது தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலுக்கான உண்மையான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.