தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் இரண்டு முக்கிய அறிவிப்புகளை சட்டமன்றத்தில் வெளியிட்டார். இது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
முதலாவது அறிவிப்பு: உலக மாமேதை காரல் மார்க்ஸை பெருமைப்படுத்திட, போற்றிட இந்த திராவிட மாடல் அரசு விரும்புகிறது. உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள் என்ற பிரகடனத்தை, உலகத் தொழிலாளர்கள் அனைவருக்குமான ஒரே முழக்கமாக பொதுவுடைமைத் தத்துவத்தை வடித்துத் தந்த புரட்சியாளர் காரல் மார்க்ஸ், இழப்பதற்கென்று எதுவுமில்லை, பெறுவதற்கோ பொன்னுலகு இருக்கிறது என்ற நம்பிக்கை விதைகளை விதைத்தவர்! அறிவுலகத் தொலைநோக்குச் சிந்தனையாளர்!
வரலாற்றில் பலரும் பிறக்கிறார்கள்; பலர் வரலாற்றுக்குத் தொண்டாற்றி இருக்கிறார்கள். ஆனால், வரலாற்றின் போக்கினையே மாற்றி அமைத்தவர்கள் சிலர் தான். அந்த ஒரு சிலரில் தலைமகனாகப் போற்றப்படுபவர் கார்ல் மார்க்ஸ். உலகப் புரட்சிகளுக்கும், இந்த உலகம் இதுவரை அடைந்துள்ள பல்வேறு மாற்றங்களுக்கும் அடித்தளம் அமைத்தது அவரது சிந்தனைகள்தான்.
இங்கு அரசியல் மாறினாலும் சமுதாய நிலை மாறவில்லை. அதேசமயம் ஒரு காலத்தில் மறுமலர்ச்சி அடைவார்கள் என்றார். இவர் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை முதன் முதலில் 1931ஆம் ஆண்டு தமிழில் மொழி பெயர்த்தது தந்தை பெரியார். இந்நிலையில் கார்ல் மார்க்ஸிற்கு சென்னை மாநகரில் சிலை அமைக்கப்படும்.
இரண்டாவது அறிவிப்பு: அகில இந்திய பார்வர்டு பிளாக் தலைவரும், உறங்காப் புலி என்று புகழப்பட்டவருமான பி.கே.மூக்கையா தேவருக்கு நாளை 103வது பிறந்த நாள். மதுரை உசிலம்பட்டியில் 1923 ஏப்ரல் 4ல் பிறந்தவர். 6 முறை எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றவர். 1971ல் ராமநாதபுரம் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வென்றவர். 1967ல் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த போது பேரறிஞர் அண்ணாவிற்கு தோள் கொடுத்தவர். கச்சத்தீவு ஒப்பந்தத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் முழங்கியவர். இவருக்கு உசிலம்பட்டியில் மணி மண்டபம் அமைக்கப்படும்.