சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றினார். பின்னர் உரையாற்றிய அவர், “நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த விடுதலை நாள் வாழ்த்துகள். விடுதலையை பாடுபட்டு பெற்றுக் கொடுத்த தியாகிகளை போற்றுவோம். விடுதலை எளிதாக கிடைக்கவில்லை; 300 ஆண்டுகால போராட்டத்துக்கு பிறகு கிடைத்த சுதந்திரம் இது” என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், ”முதல்வர் மருந்தகம் என்ற புதிய திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 1000 மருந்தகங்கள் திறக்கப்படும். இதில் சிறப்பாக செயல்படும் மருந்தாளுனர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடன் உதவியோடு ரூ.3 லட்சம் மானியம் அரசால் வழங்கப்படும். 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 75,000 மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்” என்று அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து, விடுதலைப் போராட்ட வீரர்களுக்கன மாதாந்திர ஓய்வூதியம் ரூ.20,000இல் இருந்து ரூ.21,000ஆக உயர்த்தப்படும் என்றும் தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் ரூ.11,000இல் இருந்து ரூ.11,500ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும், கட்டபொம்மன், வ.உ.சி. மருது சகோதரர்களின் வழித்தோன்றல்களுக்கான ஓய்வூதியம் ரூ.10,500ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.