ஆந்திர மாநிலத்தில் கட்டிட வேலைக்கு சென்ற பெண்ணை வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்து பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மேஸ்திரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நாகராஜு. இவரது மனைவி லட்சுமி(57). கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நாகராஜு இறந்துவிட்ட நிலையில் லட்சுமி பழைய பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாட்டில்களை சேகரித்து விற்பனை செய்து குடும்பத்தை கவனித்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் லட்சுமிக்கு கட்டிட மேஸ்திரியான மஞ்சுநாத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து கட்டிட வேலைக்கு சென்று இருக்கிறார் லட்சுமி. அப்போது லட்சுமிக்கு மது வாங்கி கொடுத்து வற்புறுத்தி அவரை குடிக்க வைத்திருக்கிறார் மஞ்சுநாத். மேலும் மது போதையில் இருந்த லட்சுமியை பாலியல் வன்புணர்வும் செய்துள்ளார்.
இதனையடுத்து போதை தெளிந்த உடன் வெளியில் சொல்லி விடுவாரோ என்ற பயத்தில் லட்சுமியை கட்டையால் அடித்து கொலை செய்த மஞ்சுநாத் அவரது உடலை தண்ணீர் ட்ரம்மில் அடைத்து வைத்துவிட்டு தப்பி சென்று இருக்கிறார். மறுநாள் கட்டிட வேலைக்கு வந்த தொழிலாளர்கள் தண்ணீர் ட்ரம்மில் சடலம் இருப்பதை பார்த்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பான விசாரணையில் மஞ்சுநாத்தை கைது செய்து விசாரித்த போது உண்மை வெளியாகி இருக்கிறது.