சீனாவின் தலைநகரில் உள்ள ஒர்க்கர்ஸ் ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியா மற்றும் அர்ஜெண்டினா அணிகள் மோதும் நட்பு ரீதியிலான போட்டியில் விளையாட சனிக்கிழமை அன்று சீனா வந்தார் மெஸ்ஸி. பெய்ஜிங் விமான நிலையத்தில் தரையிறங்கிய அவரை சோதனை பணியின் போது சீன காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். மெஸ்ஸியிடம் சீன விசா இல்லாதநிலையில், அவர் அர்ஜென்டினா பாஸ்போர்ட்டை பயன்படுத்தாமல் ஸ்பெயின் பாஸ்போர்ட்டுடன் பயணித்ததால் குழப்பம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மெஸ்ஸியின் விசா வருவதற்கு தாமதமாகியதால், சுமார் 30 நிமிடங்கள் மெஸ்ஸியை தடுத்து நிறுத்தியது சீன காவல்துறை.
மெஸ்ஸி சீன காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த வீடியோவில், “கையில் பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டு சக ஊழியர்களுடன் பேசிக்கொண்டிருந்த அர்ஜென்டினா தேசிய அணி கேப்டனை, பல போலீஸ் அதிகாரிகள் சூழ்ந்து தடுத்து நிறுத்தும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாக பரவியது. உள்ளூர் ஊடகங்களின்படி, மெஸ்ஸி தனது அர்ஜென்டினா பாஸ்போர்ட்டை விடுத்து ஸ்பானிய பாஸ்போர்ட்டை பயன்படுத்தியதால் அவர் சிக்கலை எதிர்கொண்டார்” என்று தெரிகிறது.
லியோனல் மெஸ்ஸி தனது அர்ஜென்டினா பாஸ்போர்ட்டை கொண்டுவரத் தவறியதால் விமான நிலையப் பாதுகாப்புப் பணியாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. மேலும் நெருக்கடியான ஒரு நிலைக்கு தள்ளப்பட்டது. சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு அவருக்கு நுழைவு விசா வழங்கப்பட்ட நிலையில், மெஸ்ஸி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றார். அர்ஜென்டினா அணி, ஜூன் 15 வியாழன் அன்று ஆஸ்திரேலிய அணியை நட்பு ஆட்டத்தில் எதிர்கொள்கிறது.