பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, மீண்டும் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
கடந்த ஆண்டு முதலே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.. குறிப்பாக அமேசான், மெட்டா, கூகுள், ஓலா, ஸ்விகி உள்ளிட்ட பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.. அதே போல் மைக்ரோசாஃப்ட் தொடங்கி விப்ரோ வரை பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களும் பணி நீக்கம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.. இதே போல் ஜூம், யாஹூ, கோ டாடி போன்ற நிறுவனங்களும் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி வந்தன..
ஆட்குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு நவம்பர் உலகம் முழுவதும் சுமார் 11,000 ஊழியர்களை Meta நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்தது. இந்த சூழலில் மெட்டா நிறுவனம், மீண்டும் பணி நீக்க அறிவிப்பை வெளியிட உள்ளதாக தொடர்ந்து தகவல் வெளியான வண்ணம் உள்ளன.. நவம்பரில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழந்ததைப் போலவே, மற்றொரு பெரிய அளவிலான பணிநீக்கத்திற்கு மெட்டா தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, செயல்திறன் போனஸ் செலுத்தப்பட்டவுடன், மார்ச் மாதத்தில் சுமார் 11,000 பேரை பணிநீக்கம் செய்ய மெட்ட திட்டமிட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது…
வரவிருக்கும் மாதங்களில் பல சுற்றுகளில் இந்த பணிநீக்கம் குறித்து அறிவிக்கப்படும், இது கடந்த ஆண்டு தனது பணியாளர்களில் 13 சதவிகிதம் குறைக்கப்பட்டதைப் போலவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.. மெட்டாவின் தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க், 2023 ஆம் ஆண்டு மெட்டாவில் “செயல்திறன் ஆண்டாக” இருக்கும் என்றும், சில திட்டங்கள் நிறுவனத்தில் மூடப்படலாம் என்றும் கூறி உள்ளார்…
எனவே சுமார் 11,000 பேர் அல்லது நிறுவனத்தின் 13 சதவிகிதம் பேர் வேலை இழக்க நேரிடலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதனிடையே, செயல்திறன் மதிப்பாய்வுகளில் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு “துணை மதிப்பீடுகளை மெட்டா நிறுவனம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.. சமீபத்திய செயல்திறன் மதிப்பாய்வுகளில் தோராயமாக 7,000 ஊழியர்களை “சராசரிக்கும் கீழே உள்ள நிலையில் உள்ளனர்” என்று வரிசைப்படுத்தியது.
எனவே வரவிருக்கும் வாரங்களில் அதிக ஊழியர்களை வெளியேறுவதற்கு இந்த மதிப்பீடுகள் வழிவகுக்கும் என்று மெட்டா எதிர்பார்க்கிறது.. போதிய அளவு ஊழியர்கள் பணியில் இருந்து விலகவில்லை என்றால் நிறுவனம் மற்றொரு சுற்று பணிநீக்கங்களை பரிசீலிக்கும்” என்று கூறப்படுகிறது.. எனினும் பணிநீக்கங்கள் குறித்து மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..