நேற்று முன்தினம் தினம் திருச்செந்தூர் கோவிலில், கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி, காரைக்குடியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில், நேற்று ராமேஸ்வரம் கோவிலில் வட மாநிலத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். கோவிலில் பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூட்ட நெரிசலைச் சமாளிக்கும் வகையில் அடிப்படை வசதிகளைக் கூடச் செய்யாமல், கோவில் உண்டியல் பணத்தைக் கொள்ளையடிப்பதில் மட்டும் குறியாக இருக்கிறது திமுக அரசு. மேலும், பக்தர்கள் அதிகம் வரும் கோவில்களில் நிரந்தர ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது பல நாள் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால், எந்தப் பணிகளும் செய்யாத அறநிலையத்துறைக்கு வாகனங்கள் வாங்கி அலங்கரித்துக் கொண்டிருக்கிறார் அமைச்சர் என அண்ணாமலை குற்றச்சாட்டு முன் வைத்திருந்தார்.
இந்த நிலையில் திருச்செந்தூர் கோவிலில், கூட்டநெரிசலால் உயிரிழந்த, காரைக்குடியைச் சேர்ந்த ஓம் குமார் அவர்களின் மனைவியிடம் தனது கணவன் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாக கூறி கடிதம் கொடுத்தால் தான் இறந்தவரின் உடலைக் கொடுப்போம் என்ற வற்புறுத்தலின் பெயரில் எழுதப்பட்ட கடித்தை அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில்; திருச்செந்தூர் கோவிலில், கூட்டநெரிசலால் உயிரிழந்த, காரைக்குடியைச் சேர்ந்த ஓம் குமார் அவர்களின் மனைவி எழுதியதாக, அமைச்சர் சேகர்பாபு கூறிய கடிதத்தைப் படித்துப் பார்த்தேன். அந்தக் கடிதத்தின் சில வரிகளை கோடிட்டுக் காட்டியுள்ளேன். இப்படி ஒரு கடிதம் கொடுத்தால் தான் இறந்தவரின் உடலைக் கொடுப்போம் என்ற வற்புறுத்தலின் பெயரில் எழுதப்பட்ட கடிதம் போல் உள்ளது.
மறைந்த ஓம் குமாரின் குடும்பத்தார் மேலும், தனியார் ஊடகத்தில், நேற்று அளித்த நேர்காணலைப் பார்த்தேன். கடிதத்தில் உள்ள விவரங்களுக்கும், அவர்கள் ஊடகத்தில் தெரிவித்ததற்கும் எத்தனை முரண்கள். தங்கள் ஆட்சியின் கையாலாகாத்தனத்தை மறைக்க, பொதுமக்கள் உயிரை மலிவாக எண்ணும் அமைச்சர் சேகர் பாபு, அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பதை உணர்ந்தால் நன்று.
கூட்ட நெரிசலில் உயிரிழந்த ஓம் குமார் அவர்களின் குடும்பத்தாருக்கு, 10 லட்ச ரூபாய் நிவாரணமாக, தமிழக அரசு உடனடியாக, வழங்கவேண்டும் என்றும், இனியும் கோவில்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க, முறையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.