பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாததால் மோடி அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ”தற்போதைய மத்திய அரசு சிறுபான்மை அரசு. இந்த அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம். இது இயல்பான ஒரு நிலைதான். மோடியின் இந்த அரசை மக்கள் சிறுபான்மை அரசாக ஆக்கி இருக்கின்றனர். கூட்டணி அரசு குறித்து மோடியே பலமுறை விமர்சனங்களை வைத்திருக்கிறார்.
கூட்டணி அரசு என்பது கிச்சிடி அரசு என்றும், பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி அரசு என்பது எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார். அதோடு, கூட்டணி அரசில் ஆட்சியாளர்களால் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்றும் அவர் கூறி இருக்கிறார். இவையெல்லாம் அவர் கூறியவை. அவற்றையே நான் திரும்பச் சொல்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்களை விட 32 இடங்கள் குறைவாக அக்கட்சி பெற்றுள்ளது. அதே சமயம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 16 எம்பிக்களைக் கொண்டுள்ள தெலுங்கு தேச கட்சியும், 12 எம்.பி.க்களைக் கொண்டுள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
Read More : 8 நக்சல்கள் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை..!! பாதுகாப்புப் படை வீரர் வீர மரணம்..!! சத்தீஸ்கரில் பரபரப்பு..!!