புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமியை தலையாட்டி பொம்மை போல மோடி நடத்திக் கொண்டிருக்கிறார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து, நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா, தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த பரப்புரை பொதுக்கூட்டத்தில் மல்லிகார்ஜூனா கார்கே பேசியதாவது, “புதுச்சேரி வளர்ச்சிக்காக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு அப்போது புதுச்சேரிக்கு யூனியன் பிரதேச அங்கீகாரம் கொடுத்தது. புதுச்சேரி முழுமையான மாநில அந்தஸ்து பெற்ற மாநிலமாக மாற வேண்டும், காங்கிரஸ் கட்சி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க உறுதுணையாக இருக்கும். காங்கிரஸ் கட்சி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை உறுதியாக நிறைவேற்றும் மாநில அந்தஸ்தை பெற்றுத்தருவோம். ஆனால் மோடியோ, ரங்கசாமியோ வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுப்போம் என்று பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ஒரு வரி கூட குறிப்பிடவில்லை. மாநில அந்தஸ்து வழங்காமல் புதுச்சேரி மக்களை பாஜக புறக்கணிப்பது தெளிவாக தெரிகிறது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கி, மூடப்பட்ட ஆலைகள், ரேஷன் கடைகளை மீண்டும் திறக்க காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை துணைநிலை ஆளுநரை வைத்து தொல்லை கொடுத்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை முடக்கும் வேலையை மோடி அரசு செய்து வருகிறது.
மோடி அரசாங்கம் தேர்தல் முறையில் ஆட்சிக்கு வராமல் குறுக்கு வழியில் ஆட்சி கவிழ்ப்பு செய்து நாடு முழுவதும் 444 எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கியவர் தான் பிரதமர் மோடி. பாஜக கொள்கையை ஏற்றுக்கொள்ளாத அமைச்சர்களோ, எம்.எல்.ஏக்களையோ எம்.பிக்களை தொல்லை கொடுக்கும் வேலையில் மோடி அரசு ஈடுபட்டு வருகின்றது.
தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்காக அரசு மூலம் கோப்புகளை அனுப்பினால் அதை தடுத்து நிறுத்துவதும் மறுப்பதும் அம்பேத்கார் கொண்டு வந்த அரசியலைமைப்பு சட்டத்தை மீறிய செயலை மோடி செய்து வருகின்றார். புதுச்சேரியில் எந்த அளவிற்கு ஆளுநரை வைத்து காங்கிரஸ் ஆட்சிக்கு தொல்லை கொடுத்தார்களோ அதே போல் தமிழகத்திலும் ஆளுநர் மூலம் நெருக்கடியை கொடுக்கின்றார் மோடி.
புதுச்சேரி மாநில முதலமைச்சர் பார்த்து பரிதாபப்படுகிறேன், அவரை செயல்படவிடாமல் தன் கைக்குள் பிரதமர் வைத்துக்கொண்டு தலையாட்டி பொம்மை போல நடத்திக் கொண்டிருக்கிறார், எப்படி முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு தொல்லை கொடுத்தாரோ அதேபோல தற்போது முதல்வர் ரங்கசாமிக்கும் பிரதமர் மோடி தொல்லை கொடுத்து வருகிறார் என மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிட்டுள்ளார்.