இந்தியாவிலேயே உயர் கல்வித் துறையில் முதன்மை மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு விளங்கிக்கொண்டிருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின்; திராவிட மாடல் ஆட்சி அமைந்தபிறகு, கல்விக்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். கல்விக்கான நம்முடைய பணிகளில் சிலவற்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால், இன்றைக்கு இந்தியாவிலேயே உயர் கல்வித் துறையில் முதன்மை மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு விளங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் 32 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொடங்கியிருக்கிறோம். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். போன்ற போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு முதனிலை தேர்வுக்கு மாதம் 7 ஆயிரத்து 500 ரூபாயும், மெயின்ஸ் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாயும் வழங்குகிறோம்.
6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து, ஐ.ஐ.டி, என்.ஐ.டி, போன்ற ஒன்றிய அரசு நிறுவனங்களில் இளநிலை கல்வி பயில சேர்க்கை பெற்றவர்களுக்கு முழு கல்விச் செலவையும் அரசே ஏற்றுக்கொள்கிறோம். நான் முதல்வன் திட்டம் மூலமாக 22 இலட்சத்து 56 ஆயிரம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி தந்து, பெரு நிறுவனங்களில் பணிபுரிய அவர்களை தகுதிப்படுத்தி வருகிறோம். புதுமைப்பெண் திட்டத்தால், கல்லூரிகளில் சேரும் மாணவியர்களின் எண்ணிக்கை 34 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. தமிழ்ப் புதல்வன் திட்டத்தால் மாணவர்களின் உயர்கல்வி ஆர்வம் அதிகம் ஆகியிருக்கிறது. முதல் தலைமுறையாக கல்லூரி வரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணச் சலுகைக்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆயிரம் கோடி ரூபாய் செலவில் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 150 ரூபாய் கோடி செலவில் உயர்கல்வி நிறுவனங்களில் டிஜிட்டல் முறையில் ஒருங்கிணைந்த கற்றல் மேலாண்மை அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
மாணவர்களுக்கான தொழில் திறன் மேம்பாட்டுத் திட்டம்,முதலமைச்சரின் ஆராய்ச்சி மானியத் திட்டம், முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத் தொகை திட்டம் ‘உங்களைத் தேடி உயர்கல்வி’ – இப்படி என்னால் சொல்லிக்கொண்டே இருக்க முடியும். இந்த திட்டங்களால் தமிழ்நாட்டில் உயர்கல்வித் தரமும், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதனால்தான், இன்று இந்தியாவிலேயே அதிக அளவிலான அரசுப் பல்கலைக்கழகங்கள் உள்ள மாநிலமாக, ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட தரம் வாய்ந்த பொறியியல் கல்லூரிகள் இருக்கும் மாநிலமாக, அதிக அளவிலான மருத்துவக் கல்லூரிகள் இருக்கும் மாநிலமாக, புகழ்பெற்ற 100 உயர்கல்வி நிறுவனங்களில் 31 உயர்கல்வி நிறுவனங்கள் இருக்கும் மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு விளங்கிக்கொண்டிருக்கிறது.
உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தேசிய சராசரியைவிட இரண்டு மடங்கு அதிகமாக 49 விழுக்காடு பெற்று இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் பெற்றிருக்கிறது என்றார். மாநிலத்தின் கல்வி உரிமையை மீட்கும் வரைக்கும் இந்தச் சட்டப்போராட்டங்களும் – அரசியல் போராட்டங்களும் தொடரும் என்றார்.