கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதலமைச்சர் என கூறுவது எல்லாம் மக்களிடையே எடுபடாது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காகப் பாடுபடும் இயக்கம் திமுக”நெல்லையில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1,000-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர், முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். குறிப்பாக, அண்மையில் பாஜகவிலிருந்து விலகிய நெல்லை மாவட்ட பாஜக தலைவர் தயாசங்கர், பொதுச் செயலாளர் வேல் ஆறுமுகம், அதிமுகவைச் சேர்ந்த இளங்காமணி உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர்.
நெல்லையில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்; திமுக தொடங்கியபோது தேர்தலில் போட்டியிட வேண்டுமா, வேண்டாமா என்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், தற்போது சிலர் கட்சி தொடங்கியதுமே ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்றும், முதல்வராவோம் என்றும் தெரிவித்து வருகிறார்கள். இதெல்லாம் மக்களிடம் எடுபடாது. யார் எப்படிப்பட்டவர்கள் என்பது மக்களுக்கு தெரியும்.
தேர்தலில் நிற்க வேண்டும் என்று முடிவெடுத்து 1957 தேர்தலில் திமுக போட்டியிட்டபோது 15 எம்எல்ஏக்கள் கிடைத்தனர். இப்படி படிப்படியாக வளர்ந்து 6-வது முறையாக ஆட்சியில் இருக்கிறோம். 2026 தேர்தலில் 7-வது முறை வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கும் என்றார்.