பயங்கரவாத எதிர்ப்பு படை அதிகாரிகளுக்கு, இந்திய தூதரகங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள், பணத்திற்காக பாகிஸ்தானின் உளவு அமைப்பான ISI-க்கு, இந்தியாவைப் பற்றிய பல ரகசிய ஆதாரங்களை கசிய விடுவதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரக ஊழியர் ஐஎஸ்ஐக்கு உளவு வேலை பார்த்ததாக கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹபூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதேந்திர சிவல், வெளியுறவு அமைச்சகத்தில் எம்.டி.எஸ் (மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப்) ஆக பணிபுரிகிறார். மேலும் இவர் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு உதவியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
சதேந்திர சிவல், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு இந்திய ராணுவம் மற்றும் ராணுவ தகவல்கள் பற்றிய ரகசியங்களை அளித்து வந்திருக்கிறார். பணத்தின் பொருட்டு இதனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மீரட்டில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு படை அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்ட சிவல், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் அளித்த பதில்கள் திருப்திகரமாக இருக்கவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் தனது குற்றத்தையும் ஒப்புக் கொண்டுவிட்டார் என்று பயங்கரவாத எதிர்ப்பு படை அதிகாரி தெரிவித்தார்.
இந்த குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை குறித்து வெளியுறவு அமைச்சகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. வெளியுறவு அமைச்சகமும் இது தொடர்பான ஒத்துழைப்பை அளித்து வருவதாக பயங்கரவாத எதிர்ப்பு படை தெரிவித்துள்ளது.
இந்திய தூதரகத்தில் வேலை செய்ததால் சிவலுக்கு ராணுவம் குறித்த தகவல்கள் எளிதில் கிடைத்துள்ளன. அவர் ஐஎஸ்ஐயில் உள்ள ஒரு பெண்ணிடம், பணத்திற்காக பேரம் பேசி, இந்திய ராணுவ ரகசியங்களை விற்றதாகத் தெரிகிறது.
இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம், 1923 121A (சதி செய்ய சதி செய்தல், அல்லது போரை நடத்த முயற்சி செய்தல், அல்லது இந்திய அரசுக்கு எதிராக போரைத் தூண்டுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் சிவல் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் விசாரணையின் போது சிவிலிடம் இருந்து அவரது, ஆதார் கார்டு இரண்டு மொபைல் போன்கள், பான் கார்டு போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் ஐஎஸ்ஐக்கு தகவல் கொடுத்ததன் மூலம், எவ்வளவு பணம் சம்பாதித்துள்ளார் என்றும், அவரது நிதி பரிவர்த்தனைகளையும் ஆய்வு செய்து வருவதாக ஏடிஎஸ் கூடுதல் டைரக்டர் ஜெனரல் மோஹித் அகர்வால் தெரிவித்தார்.