பீகார் மாநிலத்தில் உள்ள பாலி என்ற கிராமத்தில் லாலன் குமார் வசித்து வருகிறார். இவரது மனைவி பூனம் வர்மா, கடந்த சில நாட்களாக இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். நேற்று அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்ததால் குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் ஐசியூவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
நோயாளியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், எந்த நேரத்திலும் உயிரிழக்க நேரிடும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதை கேட்ட பூனம் வர்மா, தனது கடைசி ஆசை மகளின் திருமணத்தை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிருந்த மகள் சாந்தினி குமாரிக்கும் மணமகனுக்கும் பூனம் வர்மா முன் ஐசியூவில் திருமணம் நடந்தது. 2 மணி நேரத்துக்கு பிறகு பூனம் வர்மா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.