அம்பேத்கரின் பெயருக்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வாறு பலமுறை சொன்னாலாவது அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியது சர்ச்சையாகியுள்ள நிலையில், அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளது.
இந்த நிலையில், பி.ஆர்.அம்பேத்கர் குறித்து அமித் ஷா கூறிய கருத்துக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி மற்றும் பாஜக எம்பிக்கள் இடையே கடுமையான மோதலும் ஏற்பட்டது. அப்போது நாடாளுமன்றத்துக்குள் செல்ல லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முயற்சித்தார். ஆனால் பாஜக எம்பிக்களோ அவரைத் தடுத்து தள்ளிவிட்டனர். இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டு பின்னர் மோதலாக வெடித்தது
இந்த மோதலில் பாஜக எம்பி பிரதாப் சாரங்கி மண்டை உடைந்தது. அவர் தலையில் ரத்தம் வழிந்தோடிய நிலையில் வீல் சேரில் அமர வைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. காயம் குறித்து எம்பி பிரதாப் சாரங்கி கூறுகையில், நான் ஒரு பக்கம் ஓரமாக நின்றுக்கொண்டு இருந்தேன். அப்பொழுது எம்.பி. ராகுல் காந்தி என்னை தள்ளி விட்டார். நான் தரையில் விழுந்து காயம் அடைந்தேன் என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து பாஜக எம்பி பிரதாப் சாரங்கி காயமடைந்ததாகக் கூறப்படும் விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. இதேபோல மற்றொரு பாஜக எம்பி முகேஷ் ராஜ்புத் எம்பியும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more ; நெல்லை அரசு மருத்துவமனையில் வேலை.. ரூ.60 ஆயிரம் சம்பளம்.. செம சான்ஸ்! விட்றாதீங்க..