தன் இரு மனைவிகளிடம் இருந்து அனுதாபம் பெற செய்த காரியம் ஒன்று தனக்கே வினையான சம்பவம் மும்பையில் நிகழ்ந்துள்ளது.
சந்தீப் கெய்க்வாட் என்பவர் மும்பையில் கல்யாண் நகரைச் சேர்ந்தவர். தனது இரு மனைவியிடமும் அனுதாபத்தைப் பெற தனது மூன்று நண்பர்களின் உதவியுடன் தானே தன்னை கடத்திய சம்பவம் மற்றும் அவரே சிக்கிய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு காரணம் தனது மனைவிகள் தன்னை நன்றாக கவனிக்கவில்லை என்பதால் இதனைச் செய்ததாகக் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த நான்கு நாட்களுக்குப் பிறகு ,அவரது நண்பரின் வீட்டில் தானே மாவட்டத்தில் உள்ள ஷஹாபூரில் அவர் மறைந்திருந்ததைப் போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர்.
சுனிதா கெய்க்வாட் என்பவர் சந்தீப் கெய்க்வாட் மனைவி. இவர் கடந்த அக்டோபர் 14 அன்று கோல்சேவாடி காவல் நிலையத்திற்குச் சென்று தனது கணவர் சந்தீப் கெய்க்வாட் என்பவரை கும்பல் ஒன்று கடத்தியதாக வழக்குப் பதிவு செய்துள்ளார். சாலையில் நின்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்த நிலையில், ஜே.பி சாலையில் உள்ள சத்கர் டவர் அருகிலிருந்து ஒரு ஆட்டோரிக்ஷாவில் வந்த மூன்று பேர் சந்தீப்பை அடித்துவிட்டு அவரை ஆட்டோவில் ஏற்றிச் சென்றுள்ளனர் என புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில்
அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ஆட்டோ மற்றும் அதன் டிரைவரை கண்டுபிடித்த போது, அவர்கள் ஜாவேத் கான், ஆகாஷ் அபாங் மற்றும் அவி பாட்டீல் ஆகிய மூன்று பேர் எனக் கண்டறியப்பட்டது.
இதனை அடுத்து 18 ஆம் தேதி ஜாவேதையை உல்லாஸ்நகரில் உள்ள வால்துனி என்ற இடத்தில் போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு இது போலி கடத்தல் என ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். கெய்க்வாட்டின் முதல் மனைவி அவரோடு இணைந்து வாழவில்லை.
இதில் தனது கடத்தலை தனது மாமியாரின் மீது பழிபோடச் சொல்லி கெய்க்வாட் தங்களிடம் சொன்னதாகவும், இதனால் இரண்டு மனைவிகளுக்கும் தன் மீது அனுதாபம் பிறக்கும் என அவர் எண்ணியதாகவும் தெரிவித்துள்ளார். இறுதியில் கெய்க்வாட் இப்போது சிறையில் உள்ளார்.