நெல்லை நீதிமன்ற வாசலில் நடந்த கொலை தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்றம்.
நெல்லை, பாளையங்கோட்டையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் மாவட்ட நீதிமன்றம் அமைந்துள்ளது. இந்த நீதிமன்றம் முன்பு நேற்று காலை பொதுமக்களை பதற வைக்கும் வகையில் ஒரு கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. சாலையோரம் சுமார் 22 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரை மர்ம கும்பல் அரிவாளால் மிகக் கொடூரமாக தலை, கை, கால் போன்ற பகுதியில் வெட்டி கொலை செய்துள்ளனர். ஒரு கை மணிக்கட்டுக்கு மேல் துண்டாகி தனியாக கிடந்துள்ளது.
சம்பவம் குறித்து மாநகர காவல் துணை ஆணையர் விஜயகுமார் மற்றும் போலீஸார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்டவர் கீழநத்தம் மேலூர் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி (38) என்பதும், கீழநத்தம் ஊராட்சி வார்டு உறுப்பினர் ராஜாமணி கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. கொலை முயற்சி வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. எனவே, ராஜாமணி கொலை சம்பவத்துக்கு பழிக்குப் பழியாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து பாளையங்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நெல்லை படுகொலை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது நீதிபதிகள், “பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்துக்குள் ஒருவரை துரத்தி கொலை செய்துள்ளனர். அங்கு பணியில் இருந்த போலீஸார் என்ன செய்து கொண்டிருந்தனர்? கொலையாளிகளை காலில் சுட்டு அல்லது அவர்கள் தப்பிச் சென்ற காரின் சக்கரத்தையாவது சுட்டுப் பிடிக்க முற்பட்டிருக்கலாமே?” என்று கேள்வி எழுப்பினர்.