என்சிஎல் நிறுவனம் குடும்பத் தலைவிகளை முதலுதவி அளிப்பவர்களாக மாற்றுகிறது.
கோல் இந்தியா லிமிடெட்டின் துணை நிறுவனமான நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (என்சிஎல்), மிகவும் இயந்திரமயமாக்கப்பட்ட சுரங்கங்களுக்கும், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிப்பதற்கும் பெயர் பெற்றது. இது பெரிய அளவில் ‘குடும்பத் தலைவிகளுக்கான முதலுதவி பயிற்சித் திட்டத்தை’ அறிமுகப்படுத்தியுள்ளது. முதலுதவி பற்றிய விழிப்புணர்வை பணியிடத்திற்கு அப்பால், பணியாளர்களின் வீடுகளுக்கும் விரிவுபடுத்துவதன் மூலம், என்சிஎல் நிறுவனம், தயார்நிலை கலாச்சாரத்தை வலுப்படுத்துகிறது. இந்த முயற்சி மூலம் ஜூன் 2025 க்குள் என்சிஎல் மூலம் 8,000 இல்லத்தரசிகள் முதலுதவி அளிப்பவர்களாக மாற்றப்படுவார்கள்.
26 ஜனவரி 2025 அன்று தொடங்கப்பட்ட இல்லத்தரசிகளுக்கான முதலுதவி பயிற்சித் திட்டத்தில், ஒரு மாதத்தில், பல்வேறு அமர்வுகளில் சுமார் 1,500 இல்லத்தரசிகளுக்கு வெற்றிகரமாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குடும்பங்களின் நலன், ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதே நேரத்தில் மருத்துவர்களின் சுமையைக் குறைக்கிறது.
இல்லத்தரசிகள் பெரும்பாலும் வீட்டில் மருத்துவ அவசரநிலைகளுக்கு முதலில் உதவி அளிப்பவர்கள் என்பதால், சிக்கலான சூழ்நிலைகளில் உடனடியாகவும் திறம்படவும் செயல்படுவதற்கான அறிவையும் நம்பிக்கையையும் அவர்களுக்கு வழங்கும் வகையில் இந்தப் பயிற்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் நடைமுறை திறன்களையும் விழிப்புணர்வையும் வலியுறுத்துகிறது.
தீக்காயங்கள், வெட்டுக்கள், மூச்சுத் திணறல், விஷம், சிறிய காயங்கள், வெப்பம் தொடர்பான வியாதிகள், இதய நுரையீரல் புத்துயிர் (சிபிஆர்) உள்ளிட்ட பொதுவான மருத்துவ சூழ்நிலைகளை நிர்வகிக்க நடைமுறை அறிவுடன் இல்லத்தரசிகளுக்கு பயிற்சி அளிப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. என்சிஎல்-ன் உள்ளக மருத்துவ நிபுணர்களால் நடத்தப்படும் இந்த பயிற்சி, பங்கேற்பாளர்களின் நம்பிக்கையையும் திறனையும் மேம்படுத்துகிறது. சமூக நலன், பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கான என்சிஎல்-ன் அர்ப்பணிப்பு இந்த பெரிய அளவிலான முயற்சியின் மூலம் தெளிவாகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.