இந்திய துணை ஜனாதிபதி பதவிக்கு ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஜக்தீப் தங்கரை சனிக்கிழமை அறிவித்தது. ஜக்தீப் தங்கர் தற்போது மேற்கு வங்க ஆளுநராக பணியாற்றி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங், பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் கலந்துகொண்ட பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இது குறித்து பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ஜக்தீப் தன்கர் அவர்கள் தனது பணிவிற்கு பெயர் பெற்றவர். அவர் ஒரு சிறந்த சட்ட சேவகர், சட்டமன்ற மற்றும் கவர்னர் பதவியை வகித்தவர். அவர் எப்போதும் விவசாயிகள், இளைஞர்கள் நலனுக்காக உழைத்துள்ளார். பெண்கள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருக்க கூடியவர். அவர் எங்களின் துணை ஜனாதிபதி வேட்பாளராக இருப்பதில் மகிழ்ச்சி என கூறியுள்ளார்.
ஜக்தீப் தங்கர் ஒரு மூத்த அரசியல்வாதி ஆவார். அவர் 1993 இல் ராஜஸ்தானின் கிஷன்கரில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் ராஜஸ்தான் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் ஜெய்ப்பூரில் தலைவராக பணியாற்றினார். ஜூலை 30, 2019 அன்று, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவரை மேற்கு வங்க ஆளுநராக நியமித்தார். இதற்கிடையில், இந்திய துணை ஜனாதிபதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறும் மற்றும் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 19 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.