வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தமிழ் மொழி, நாட்டுப்புற கலைகள், தமிழ் பண்ணிசைகளை 100 ஆசிரியர்கள், கலைஞர்கள் மூலம் நேரடியாக பயிற்றுவிக்க ரூ.10 கோடியில் புதிய திட்டம் உருவாக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் அயலக தமிழர் தின விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின்; அயலக மண்ணிலும் தமிழுக்காக பாடுபட்ட சான்றோர்களின் வழித்தோன்றல்கள் மற்றும் சமீபகாலங்களில் வெளிநாடுகளுக்கு சென்று இந்தியாவுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் தமிழ் சொந்தங்களுக்கு நன்றி சொல்லவும், அங்கீகாரம் வழங்கவும்தான் அயலக தமிழர் தினம் கொண்டாடப்படுகிறது. 4-வது ஆண்டாக இந்த விழா நடைபெறுகிறது. ஏதோ ஒன்று கூடினோம். பழம்பெருமைகளை பேசினோம் என்று நாம் கலைந்து போகவில்லை.
கடந்த காலங்களில் தீட்டிய திட்டங்களின் செயல்பாட்டை ஆராய்ந்து, நிகழ்கால வளர்ச்சிப் போக்கை ஆய்வு செய்து, எதிர்காலத்தில் அயலக தமிழர்கள் மேலும் சிறப்பாக வாழ்வதற்கான திட்டங்களை உறுதிப்படுத்துகிறோம். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் புலம்பெயர்ந்த தமிழர்களின் வழித்தோன்றல்களை, தமிழகத்துக்கு அழைத்து வந்து, அவர்களது வேர்கள் பரவியிருக்கும் கிராமங்களை அடையாளம் காட்டுவதே ‘வேர்களை தேடி’ திட்டத்தின் நோக்கம். என் அரசியல் வாழ்க்கையில் இத்திட்டம் ஒரு மைல்கல். இத்திட்டத்தில் இதுவரை 2 பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு, 157 இளைஞர்கள் தாய் மண்ணுக்கு வந்துள்ளனர். அதில் 38 இளைஞர்கள் பயணத்தின் நிறைவு நாளான இன்று வந்துள்ளனர். இந்த பயணமும், உறவும் என்றென்றும் தொடர வேண்டும்.
அயலக தமிழர் நல வாரியத்தில் இதுவரை 26,700-க்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்தவர்களுக்கு காப்பீடு, அவர்களது குடும்பத்தினருக்கு திருமண உதவி, கல்வி உதவி, ஓய்வூதியம் என பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நம் தமிழ் மொழி, நாட்டுப்புற கலைகள், தமிழ் பண்ணிசைகளை அயலகத்தில் வசிக்கும் தமிழ் மக்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நேரடியாக பயிற்றுவிக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகளில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. 100 ஆசிரியர்கள், தமிழ் கலைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து, அயலக தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு தேவைக்கேற்ப அனுப்ப புதிதாக ஒரு திட்டம் உருவாக்கப்படும். இவர்கள் அப்பகுதியில் உள்ள தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து, தமிழ் மொழியையும், தமிழ் கலைகளையும் 2 ஆண்டுகளுக்கு நேரடி வகுப்புகள் மூலம் பயிற்றுவிப்பார்கள். இதற்கு ஆகும் செலவை தமிழக அரசே ஏற்கும். இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றார்.