தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.இதனை தமிழக அரசும், காவல்துறையும் தடுப்பதாக தெரிவித்து வந்தாலும் அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை எந்த விதத்திலும் இது போன்ற சமூக விரோத செயல்கள் நடைபெறுவதை தடுப்பதாக தெரியவில்லை.
அந்த வகையில் மதுராந்தகம் அருகே இருக்கக்கூடிய ஒரு கிராமத்தைச் சார்ந்த ஆறு வயது சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் பாலாஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த வழக்கு செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதி மன்றத்தில் நீதிபதி தமிழரசி முன்பு விசாரணை நடைபெற்றது.விசாரணை முடிவடைந்து நேற்று இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் பாலாஜி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டதால் அவருக்கு 10 வருட கால சிறை தண்டனையும் 10000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
அத்துடன் நீதிமன்றம் விதித்த 10000 ரூபாய் அபராதத்தை கட்ட தவறினால் பாலாஜிக்கு மேலும் 2 ஆண்டு கால சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். அதோடு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.