திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவராக பணியாற்றி வருகிறார் உதயகுமார். இவர் தன்னுடைய குடும்பத்துடன் பழனி மாநகரில் உள்ள அண்ணாநகர் பகுதியில் ஒரு வீட்டில் வசித்து வருகிறார். இவருடைய மகளும், மனைவியும் சென்னைக்கு சென்று விட்டதால் இவர் மட்டும் தனியாக வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அதிகாலை சமயத்தில் இவரது வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் அவரை கத்தியால் தாக்கி கட்டி போட்டுள்ளனர்.
ஆகவே மருத்துவரை கட்டி போட்ட அந்த கும்பல் வீட்டில் இருந்த 100 சவரன் தங்க நகை மற்றும் 20 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற பின்னர் மருத்துவர் உதயகுமார் கூச்சலிட்டுள்ளார். அப்போது அவருடைய சத்தம் கேட்டு அருகில் இருந்த நபர்கள் அவருடைய வீட்டிற்கு வந்து பார்த்து உதயகுமாரை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், கைவிரல் நரம்பு அறுக்கப்பட்டதால் மதுரை தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அவர் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி நகர காவல் துறையைச் சார்ந்தவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் டிஐஜி அபிநவ் குமார், உள்ளிட்டோர் குற்றம் நடைபெற்ற பகுதியில் ஆய்வு நடத்தி வருகின்றன.
காவல்துறையினரின் விசாரணையில் பழனி அண்ணா நகரில் வசித்து வரும் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கத்தியால் தாக்கி கட்டிப்போட்டு 100 சவரன் நகைகள் மற்றும் 20 லட்சம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. குற்றவாளிகள் வீட்டிலிருந்த கண்காணிப்பு கேமராக்களை திருப்பி வைத்ததுடன் ஹார்ட் டிஸ்க்குகளையும் திருடிச் சென்றுள்ளனர்.
அதோடு அந்தப் பகுதியில் உள்ள மற்ற கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காணும் வேலையில் காவல்துறையினர் தீவிரமாக இறங்கி உள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் பழனி டிஎஸ்பி சிவசக்தி, பழனி நகர காவல்துறை ஆய்வாளர் உதயகுமார் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா உள்ளிட்டோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர் காவல்துறையைச் சார்ந்தவர்கள்.