கடந்த 8ம் தேதி 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது இதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளை மேற்படிப்பு படிக்க வைப்பதற்காக பெற்றோர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இதற்கு 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் முக்கியமாக இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் தான் இது தொடர்பாக பள்ளி தேர்வு துறை இயக்குனர் சேதுராமவர்மா மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதாவது, 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன் பிறகு மதிப்பெண் பட்டியலில் இருக்கின்ற தகவல்களை சரி பார்த்து கையொப்பம், பள்ளி முத்திரையிட்டு தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் அவற்றை பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் விநியோகம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மதிப்பெண் பட்டியலில் பிழைகள் ஏதாவது இருந்தால் அதன் விவரங்களை இயக்குனராகத்துக்கு தெரிவிக்க வேண்டும். இந்த மதிப்பெண் பட்டியலை கல்லூரி சேர்க்கை உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடப்பட்டு அதன் பிறகு வழங்கப்படும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.