பெண்களைப் பொறுத்தவரையில் தங்களுடைய வீட்டைத் தவிர வேறு எங்குமே பாதுகாப்பு கிடைக்காது என்ற நிலை தற்போது ஏற்பட்டு இருக்கிறது. ஆசியாவிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு நாடாக இந்தியா இருக்கிறது.
அனைத்து துறைகளிலும் அதிநவீனத்துடன் வளர்ந்து வரும் இந்த நாட்டில் பெண்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லை என்பது நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.
உலக அரங்கில் மிக வேகமாக பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் ஒரு நாடாக இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது.
அதே நேரம் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற விவகாரம் உலக அரங்கில் எழுந்தால் அது நிச்சயமாக உலக அரங்கில் இந்தியாவை தலைகுனிய வைக்கும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.
அந்த வகையில், உத்தர பிரதேச மாநிலம் சம்பல் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் தன்னுடைய 2 வயது மகனுடன் கடந்த 16ஆம் தேதி டேராடூன் பிரயாக்ராஜ் லிங்க் விரைவு ரயிலில் பயணம் செய்தார். இவர் பொதுப்பெட்டியில் பயணம் செய்து வந்த நிலையில், அந்த பெண்ணுக்குத் தெரிந்த பயணச்சீட்டு பரிசோதகர் ராஜூ சிங் அந்த ரயிலில் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், ராஜு சிங் அந்த பெண்ணிடம் குழந்தையுடன் புதுப்பெட்டியில் பயணம் செய்வது மிகவும் கடினம் என்று தெரிவித்த அந்த டிக்கெட் பரிசோதகர் அந்த பெண்ணுக்கு ஏசி முதல் வகுப்பு பெட்டியில் இருக்கை ஏற்பாடு செய்து கொடுத்தார்.
இதனையடுத்து அந்தப் பெண் ஏசி முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்து வந்த நிலையில், இரவு பத்து மணி அளவில் அந்த டிக்கெட் பரிசோதகர் ராஜூ சிங் குடிநீர் பாட்டிலை கொண்டு வந்து கொடுத்து நீர் அருந்த வைத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
அந்த டிக்கெட் பரிசோதகர் கொடுத்த குடிநீர் பாட்டிலில் மயக்க மருந்து கலக்கப்பட்டு இருந்த நிலையில், அதனை குடித்த பெண் உடனடியாக மயக்க நிலைக்கு சென்றுவிட்டார். அதன் பிறகு டிக்கெட் பரிசோதகர் ராஜூ சிங் மற்றொரு நபருடன் சேர்ந்து அந்த பெண்ணை ரயில் பெட்டியிலேயே வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.
அந்தப் பெண் மயக்க நிலையில் இருந்ததால் அவரால் எதையும் செய்ய முடியவில்லை என்று காவல்துறையிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
மயக்கம் தெளிந்த பிறகு தனக்கு நேர்ந்த கொடுமையை உணர்ந்து கொண்ட அந்த பெண் காவல்துறையிடம் புகார் வழங்கினார் அதனை அடிப்படையாகக் கொண்டு டிக்கெட் பரிசோதகர் ராஜூ சிங்கை காவல்துறையினர் கைது செய்தனர்.
அதே சமயம் மற்றொரு நபரை அந்த பெண்ணால் அடையாளம் காண இயலவில்லை அந்த நபரை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.