கிருஷ்ணகிரி அடுத்துள்ள மாதேப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் வெங்கடேசன், தனலட்சுமி தம்பதியினர். இந்த தம்பதிக்கு 8 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் தான் தனலட்சுமி கடந்த 12ஆம் தேதி தன்னுடைய குழந்தையை எடுத்துக்கொண்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனை செய்வதற்காக சென்று உள்ளார்.
அந்த சமயத்தில் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலைய சுகாதார வளாகம் அருகில் இந்த குழந்தையை வைத்துவிட்டு கழிவறைக்கு சென்று, திரும்பி வந்த போது குழந்தையை காணவில்லை என்று கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை வழங்கியிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய காவல்துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.இது தொடர்பாக குழந்தையின் தாய் தனலட்சுமியிடம் விசாரணை நடத்தியபோது, தனலட்சுமி சரியாக ஒத்துழைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
ஆகவே அவர் மீது சந்தேகமடைந்த காவல்துறையினர் சம்பவ நடைபெற்ற இடத்திலிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் தனலட்சுமி குழந்தையை கொண்டு வருவதும், அப்போது ஒரு பெண்மணி தனலட்சுமியிடமிருந்து குழந்தையை பெற்றுக்கொண்டு செல்வதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இதனைத் தொடர்ந்து தனலட்சுமியிடம் காவல்துறையினர் நடத்திய கிடக்குப்பிடி விசாரணையில், அந்தக் குழந்தையை 25 ஆயிரம் ரூபாய்க்கு தனலட்சுமி விற்று விட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியை சார்ந்த உதயா(37), சுமதி(32) என்ற தம்பதியினருக்கு திருமணம் ஆகி 5 வருடங்களை கடந்த பின்னரும் குழந்தை இல்லை என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில்தான் சுமதி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்றும், தான் ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்புவதாகவும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த தனலட்சுமி தன்னுடைய குழந்தையை விற்பதாக அவர்களிடம் விலை பேசி உள்ளார். பின்னர் குழந்தையை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்று விடுவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 12ஆம் தேதி சுமதியை கிருஷ்ணகிரி நகரத்திற்கு வரவழைத்த தனலட்சுமி கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் குழந்தையை ஒப்படைத்துவிட்டு, 25 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
ஆனால் மறுநாள் தனலட்சுமி தன்னுடைய குழந்தை தொடர்பாக நலம் விசாரிப்பதற்காக சுமதியை தொடர்பு கொண்டபோது, அவருடைய செல்போன் உபயோகத்தில் இல்லை என்று தெரியவந்திருக்கிறது. அதன் பிறகு தன்னுடைய குழந்தையை விற்பனை செய்த விவகாரம் குறித்து காவல்துறையினிடம் உண்மையை தெரிவிப்பதற்கு பயந்து, தனலட்சுமி தன்னுடைய குழந்தை காணாமல் போனதாக காவல்துறையில் புகார் வழங்கியதும் காவல்துறையினரின் இந்த அதிரடி விசாரணையில் தெரியவந்தது.
ஆகவே குழந்தையின் தாய் தனலட்சுமி, குழந்தையை வாங்கிய சுமதி, உதயா தம்பதியினர் உள்ளிட்ட மூவரையும் கைது செய்த காவல்துறையினர், சிறையிலடைத்திருக்கிறார்கள். இது குறித்து தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். காவல்துறையினர் இந்த சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.