தலைநகர் டெல்லியில் ரோகிணி பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர், தன்னுடைய 4 வயது மகளை கடந்த மே மாதம் அருகே உள்ள ஒரு பள்ளியில் சேர்த்துள்ளார். இந்த நிலையில் கடந்த 9ம் தேதி அந்த சிறுமி பள்ளி மைதானத்தில் சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஊழியராக வேலை பார்த்து வரும் சுனில்குமார் (43) என்பவர் சிறுமியை தனியாக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
அந்த சிறுமியை தனியாக அழைத்துச் சென்ற அவர் அந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்திருக்கிறார். இதனால் பயந்து போன சிறுமி, அழத் தொடங்கிய சூழ்நிலையில், இது பற்றி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று அவரை மிரட்டி இருக்கிறார். அந்த ஊழியர் இந்த நிலையில், மாலை வீடு திரும்பியவுடன் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தாயிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் தனக்கு தொந்தரவு கொடுத்த நபருக்கு பெரிய மீசை இருந்தது என்று அடையாளம் தெரிவித்து இருக்கிறார். அதனை அடிப்படையாகக் கொண்டு, சிறுமியின் தாயார் காவல் நிலையத்திற்கு சென்று புகார் வழங்கியதால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
காவல்துறையினர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தியதில், அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சுனில்குமார் அந்த பள்ளியில் 13 ஆண்டுகளாக பணியாற்றும் ஊழியர் என்பது உறுதி செய்யப்பட்டது. இவர் சுல்தான்பூரி பகுதியில் வசித்து வருகிறார். இவரை கைது செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.
மேலும் அந்த நபர் இதற்கு முன்னர் வேறு சிறுமிகளுக்கு இதுபோல பாலியல் தொல்லை வழங்கி உள்ளாரா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது.