ஒரு காலத்தில் மற்றவர்களை தாக்க வேண்டும் என்றால் கூட காவல் நிலையம், நீதிமன்றம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டுமே என்ற பயம் காரணமாக, அதுபோன்ற சமூக விரோத சம்பவங்களில் ஈடுபடாமல் இருந்து வந்தனர்.
ஆனால் தற்போது நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே காத்திருந்து கொலை செய்ய திட்டமிடுமளவிற்கு தமிழகத்தில் ரவுடிசம் வளர்ந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள மரக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகுமார்(25). இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற பல்வேறு வழக்குகள் மதுரை மண்டல மாணிக்கம் போன்ற காவல் நிலையங்களில் நிலுவையில் இருக்கின்றன.
இந்த நிலையில் தான் சென்ற 2018 ஆம் வருடம் நடைபெற்ற வழிப்பறி வழக்கு குறித்து கமுதி நீதிமன்றத்திற்கு ஆஜராவதற்காக வருகை தந்த பாலகுமாரை அவருடன் இருந்த முன் பகையின் காரணமாக, கொலை செய்வதற்கு ஒரு கும்பல் முடிவு செய்தது. அதற்காக அறிவாள், கத்தி போன்ற மிக பயங்கர ஆயுதங்களுடன் கமுதி நீதிமன்ற வளாகத்தில் ஒரு கும்பல் காத்திருந்தது.

இந்த நிலையில், மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த சரவணகுமார், பாண்டியராஜன், வல்லரசு காளீஸ்வரன், சிவசங்கர், ஷா உசேன் ,விக்னேஸ்வரன் போன்ற 7 ரவுடிகளை கமுதி காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்த பயங்கர ஆயுதங்கள், கார் மற்றும் இருசக்கர வாகனம் போன்றவற்றை பறிமுதல் செய்திருக்கிறார்கள் காவல்துறையினர்.
இதற்கு நடுவில் தன்னை கொலை செய்வதற்கு ரவுடி கும்பல் நீதிமன்றத்திற்கு வருகை தந்ததை அறிந்து கொண்ட பாலகுமார், நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த நிகழ்வு கமுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.