அரியலூர் மாவட்டம் அமீனாபாத் கிராமத்தில் உள்ளவர் பாஸ்கர் (35). கட்டிட தொழிலாளி. கடந்த 9.11.2017 அன்று பள்ளிக்கூடம் போவதற்காக லிப்ட் கேட்டு சாலையில் நின்று கொண்டிருந்த பதினோராம் வகுப்பு மாணவியை, கடத்தி சென்று பாஸ்கர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 18.11.2017 அன்று புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில், போக்சோ சட்டத்தில் பாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்து, காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார்.
இதில், பாஸ்கருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், பெண்ணை கடத்திய குற்றத்திற்காக பத்து வருடங்கள் சிறை தண்டனை, மேலும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதை தொடர்ந்து பாஸ்கரை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2018-ஆம் வருடம் அந்த மாணவி மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.