கடந்த 2013 ஆம் வருடம் வண்ணாரப்பேட்டை சேர்ந்த ரவுடி வேங்கடா என்பவரை காக்கா தோப்பு பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி பாலாஜி என்பவரின் கூட்டாளியான கருப்பு குமார் உட்பட 10 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தது.
இந்த நிலையில், சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஆரணி ரங்கன் தெருவை சேர்ந்த குமார் என்கின்ற கருப்பு குமாரை நேற்று ஆரணி ரங்கன் தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்த போது 6 பேர் கொண்ட கும்பல் வெட்டுவதற்காக திடீரென்று துரத்தி இருக்கிறது.
இதன் காரணமாக, உயிர் பயத்தில் அவர்களிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்த கருப்பு குமாரை விடாமல் விரட்டி, விரட்டி அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று மதியம் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொலை சம்பவம் குறித்து கொருக்குப்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கடந்த 2013ஆம் வருடம் நடைபெற்ற கோலின் காரணமாக தான் கருப்பு குமார் கொலை செய்யப்பட்டார் என்ற விவரம் தெரிய வந்தது.
அதாவது, வேங்கடாவின் மகன் தன்னுடைய நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து இந்த கொலையை செய்திருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றன.