ஹைதராபாத்தில் இன்டர்மீடியட் படித்து வரும் 16 வயது சிறுமி, ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே உள்ள ஃபிரங்கிபுரம் பகுதியைச் சேர்ந்தவர். சமீப காலமாக இவருக்கு ஆன்லைன் கிளாஸ் நடந்து வருவதால் அவரது தந்தை செல்போனை அவரிடம் கொடுத்துள்ளார்.
ஆனால் சிறுமி செல்போன் மூலம் படிப்பது மட்டுமல்லாமல் ஆன்லைன் மூலமாகவே 2 லட்சம் வரையிலும் வீண் செலவு செய்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் இது தனது தந்தைக்கு தெரிந்துவிட்டால் திட்டுவார் என பயந்து தந்தையின் வங்கி கணக்கில் மீண்டும் 2 லட்சம் ரூபாய் போட்டுவிட தீர்மானித்துள்ளார்.
அப்போது இணையதளத்தில் உடல் உறுப்பு தானம் தொடர்பான விளம்பரத்தையும் பார்த்துள்ளார். இது குறித்த விளம்பரம் உண்மையா? அல்லது போலியா? என்று சற்றும் யூகிக்காத சிறுமி, உடனடியாக செல்போன் என்னை தொடர்பு கொண்டுள்ளார்.
அதில் பேசிய மர்மநபர்கள் ஒரு சிறுநகத்தை தானம் செய்தால் 7 கோடி அளிப்பதாகவும், அமெரிக்காவில் உள்ள ஒருவருக்கு சிறுநீரகம் அவசரமாக தேவைப்படுவதாகவும் தெரிவித்தனர். மேலும் சிறுமியின் தந்தையின் வங்கி கணக்கு விபரத்தை அளித்தால் முதலில் 3 கோடி அனுப்புவதாகவும், மீதமுள்ள நான்கு கோடியை 16 லட்சம் வரி செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர்.
இதனை உண்மை என நம்பிய சிறுமி, தனது தந்தையின் வங்கி கணக்கு விவரத்தை வழங்கியதோடு, தனக்கு தெரிந்த சிலரிடம் 16 லட்சம் புரட்டி அவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் பல நாட்கள் ஆகியும் அவர்கள் கூறியபடி பணம் ஏதும் வராததால் தாம் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்து அவர்களுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது சிறுமியிடம் பேசிய மர்மகும்பல் டெல்லி வந்தால் பணம் கொடுப்பதாக அவர்களின் முகவரியை கூறியுள்ளனர். இதனால் அவசர அவரசமாக வீட்டிற்கு தெரியாமல் டெல்லிக்கு புறப்பட்ட சிறுமி, அங்கு சென்று பார்த்தபோது, அவர்கள் அளித்த முகவரி பொய்யான முகவரி என்பதை உணர்ந்து செய்வதறியாது திகைத்துள்ளார்.
அதோடு கிருஷ்ணா மாவட்டம் கஞ்சிகசெர்லா கிராமத்தில் உள்ள தனது தோழியின் வீட்டிற்கு சென்று விட்டார். தான் ஏமாற்றப்பட்டது தனது தந்தைக்கு தெரிந்தால் பிரச்சினையாகிவிடும் என எண்ணி செல்போனையும் ஸ்விட்ச் ஆப் செய்துள்ளார். பலமுறை போன் செய்தும் மகள் போனை எடுக்காததால் சிறுமியின் தந்தை குண்டூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் சிறுமியின் செல்போன் என்னை வைத்து சிறுமியிருக்கும் இடத்தை கண்டறிந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சிறுமி நடந்த விஷயங்கள் அனைத்தையும் கூறியுள்ளார். அத்துடன் உடல் உறுப்பு வர்த்தக மோசடி கும்பலை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்