நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் நேற்று நள்ளிரவில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. தகவல் கிடைத்தவுடன் நெல்லை மாநகர காவல் துணை கமிஷனர் சீனிவாசன், உதவி காவல் கமிஷனர் விஜயகுமார், மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாா்வையிட்டனர்.
விடுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்த நபரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இருக்கும் கம்பனேரி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (46) என்பது தெரியவந்தது. இவருடைய மகன் மாரிசெல்வம் (26). இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர்.
மாரிசெல்வத்தை சிகிச்சைக்காக நெல்லையில் இருக்கும் மருத்துவமனைக்கு ஆறுமுகம் அழைத்து வந்தார். எனவே புதிய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் விடுதியில் தந்தையும், மகனும் அறை எடுத்து தங்கியிருந்தனர். இந்தநிலையில் நேற்று நள்ளிரவில் ஆறுமுகத்தின் கழுத்தை மாரிச்செல்வம் கத்தியால் அறுத்துக் கொலை செய்துள்ளார், மேலும் அவரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மாரிச்செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.