சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள பெரியவடகம் பட்டியில் வசித்து வருபவர் சிலம்பரசன். இவர் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் விசித்ரா என்ற 22 வயது பெண்ணை இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். இந்நிலையில் விசித்ரா ஏற்கனவே கல்யாணமாகி கணவனை பிரிந்தவர். முதல் கணவருக்கு பிறந்த இரண்டு வயது மகன் விசித்ராவுடன் இருந்ததால் சிலம்பரசனுக்கு பிடிக்கவில்லை.
இதனால் சிலம்பரசன் குழந்தையின் தலைமுடியை பிளேடால் அலங்கோலமாக்கியுள்ளார். மேலும் மனைவியையும் அடித்து சித்திரவதை செய்துள்ளார். தினமும் வீட்டிற்கு வரும்போதே, குடி அல்லது கஞ்சா போதையில் வருவது, மனைவியின் தலை முடியை பிடித்து இழுத்து காலால் உதைப்பது என்று கொடுமை படுத்தி வந்துள்ளார். கொடுமை தாங்க முடியாமல் விசித்ரா தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பெயரில் தீவட்டிப்பட்டி காவல்துறையினர் இருவரையும் அழைத்து விசாரித்து சிலம்பரசனை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மீண்டும் பழையபடி போதையில் வீட்டிற்கு வந்து விசித்ராவை கடுமையாக தாக்கியதால், விசித்ரா, அதனை பக்கத்து வீட்டு பெண்ணின் மூலமாக வீடியோ எடுத்து காவல் நிலையத்தில் அளித்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை தொடர்ந்து தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.