தற்காலத்து இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் உள்ளிட்டோர் பல தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது வழக்கமாகி வருகிறது. அந்த தவறான நடவடிக்கைகள் அனைத்தும் அவர்களுடைய செல்போனில் அடங்கியிருக்கிறது என்றே சொல்லலாம்.
அப்படி பார்த்தால் செல்போன் வைத்திருக்காத இளைஞர்களே கிடையாது.ஆனாலும் பல இளைஞர்கள் அதை வைத்து தங்களை தவறான பாதைக்கு திருப்பி கொள்கிறார்கள்.அந்த வகையில், சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே இருக்கின்ற பேளூர் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் 24 இவர் தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், வாழப்பாடியைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை செவிலியர் ஒருவரிடம் அரவிந்துக்கு பழக்கம் ஏற்பட்டது.நாளடைவில் அந்த பழக்கம் காதலாக மாறியது. இந்த நிலையில், இருவரின் பெற்றோரின் சம்மதத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன்னால் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.
இதனைத் தொடர்ந்து அரவிந்தும், அவருடைய வருங்கால மனைவியும் சமீபத்தில் வெளியான லவ் டுடே திரைப்படத்தில் வருவதைப் போல ஒருவருக்கொருவர் கைபேசியை மாற்றிக் கொண்டனர்.இந்த நிலையில், தன்னுடைய காதலன் அரவிந்த் செல்போனை வைத்திருந்த அவருடைய காதலிக்கு ஒரு அதிர்ச்சி உண்டாக்கும் காட்சி செல்போனில் காத்திருந்தது.
அதாவது 10ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியிடம் அரவிந்த் காதலிக்கும் நோக்கத்தில் பேசி, ஆசை வார்த்தை கூறி வீடியோ காலில் மாணவியை அரை நிர்வாணமாக நிற்க வைத்து அதனை செல்போனில் பதிவு செய்திருந்தது தெரியவந்தது.
இதனை பார்த்த காதலி அதிர்ச்சிக்கு உள்ளானார். இது தொடர்பாக உடனடியாக சம்பந்தப்பட்ட மாணவியரின் பெற்றோரிடம் தெரிவித்து அந்த மாணவியின் பெற்றோர் மூலமாக வாழப்பாடியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார்.
இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, வழக்கு பதிவு செய்த வாழப்பாடி காவல் துறையை சார்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் அரவிந்தை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
அதோடு சம்பந்தப்பட்ட காதலி தன்னுடைய திருமணத்தை நிறுத்த கோரி பெற்றோரிடம் வலியுறுத்தி திருமணத்தை நிறுத்தி இருக்கிறார்.