சேலம் மாவட்டம் ஓமலூர் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவரை கடந்த 4 தினங்களுக்கு முன்னர் கல்லூரியில் இருந்து கார் ஓட்டுநர் ஒருவர் கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
சேலம் ஓமலூரை சேர்ந்த அந்த மாணவி கோவை கோவில் பாளையத்தில் இருக்கின்ற ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், 4️ நாட்களுக்கு முன்னர் அவர் கல்லூரியில் இருந்து வெளியே சென்று அதன் பிறகு கல்லூரிக்கு திரும்பாததால் மாணவியின் பெற்றோர் கோவில் பாளையம் காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார்கள்.
அந்தப் புகாரை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அதன் ஒரு பகுதியாக மாணவியின் கைபேசி அழைப்புகளை ஆய்வு செய்த காவல்துறையினர் மாணவி இறுதியாக பேசியது யாரிடம் என்று ஆய்வு நடத்தினர். அதில் சாத்துறை சார்ந்த ஓட்டுநர் ஞானப்பிரகாசம் மாணவியை கடைசியாக தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது. அதோடு அவர்கள் இருவரும் ராமேஸ்வரத்தில் இருப்பதை அறிந்து கொண்டனர் காவல்துறையைச் சார்ந்தவர்கள்.
இதனைத் தொடர்ந்து, ராமேஸ்வரத்திற்கு விரைந்த கோவில் பாளையம் காவல்துறையினர் அந்த கல்லூரி மாணவியை மீட்டதுடன் ஓட்டுனர் ஞானப்பிரகாசத்தை கைது செய்தனர். அந்த மாணவிக்கு 18 வயது நிறைவடையாத நிலையில் ஓட்டுநர் ஞானப்பிரகாசத்தின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.