பெங்களூருவில் இருக்கின்ற கோரமங்களாவில் உள்ள ஒரு உயரமான கட்டிடம் அருகே 28 வயது மதிக்கத்தக்க விமான பணிப்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததால் காவல்துறையினர் அந்த பெண்ணின் காதலனை அதிரடியாக கைது செய்து இருக்கிறார்கள்.
உயிரிழந்த பெண் ஒரு சர்வதேச விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றியவர் எனவும், மேலும் அவர் சமீபத்தில் தான் துபாயிலிருந்து தன்னுடைய காதலனை சந்திப்பதற்காக வந்திருக்கிறார். என்றும் தெரிவிக்கப்படுகிறது பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தனக்கு தொடர்பு உள்ளது எனவும் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது என்றும் குற்றம் சுமத்தப்பட்டவர் காவல்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்த பெண் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்து விட்டார் என்றும் அந்த விமானப்பணி பெண்ணின் காதலன் காவல்துறையிடம் வாக்குமூலம் தெரிவித்திருக்கிறார்.
இமாச்சலப் பிரதேசத்தை சார்ந்த விமான பணிப்பெண் ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றும் காதலனை சந்திப்பதற்காக வருகை புரிந்து இருந்தார். இது தொடர்பாக காவல்துறையினரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இந்த சம்பவம் நள்ளிரவு 12 மணியளவில் நடைபெற்றது.
உயிரிழந்தவர் குடியிருப்பின் 4வது மாடியில் இருந்து விழுந்திருக்கிறார். இது குறித்து முதல் கட்ட விசாரணையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது தெரிய வந்திருக்கிறது என்று காவல்துறையினரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு அந்த பெண் மாடியிலிருந்து கீழே குதித்ததாகவும் காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள். அந்தப் பெண்ணின் காதலன் அந்தப் பெண்ணை கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. ஆகவே இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இருவரும் டேட்டிங் ஆப் மூலமாக சந்தித்திருக்கிறார்கள். சென்ற 6 மாத காலமாக நெருங்கிய உறவில் இருந்த இருவருக்கும் சமீப காலமாக அவ்வப்போது தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தான் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இருவரும் படம் பார்க்க சென்று விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தபோது மீண்டும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது.