கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் சென்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வி.கே.எல் நகர் அருகே இருக்கின்ற ஒரு குப்பை தொட்டியில் துண்டு ,துண்டாக வெட்டப்பட்ட ஒரு ஆணின் இடது கை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில், இந்த வழக்கில் தொடர்புள்ள ஒரு பெண் உட்பட 3 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் காவல்துறையின் சார்பாக நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் காந்திபுரம் அழகு நிலையத்தில் வேலை செய்து வந்த பிரபு என்பது தெரியவந்தது. கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக இவர் கொலை செய்யப்பட்டு தடயங்களை மறைக்கும் விதத்தில், உடல் தலை மற்றும் ஒரு கை உள்ளிட்டவற்றை ஒரு பிளாஸ்டிக் கவரில் கட்டி, துடியலூர் அருகே இருக்கின்ற கிணற்றில் போட்டது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து பல இடங்களில் வீசப்பட்ட அவருடைய உடல் பாகங்கள் காவல்துறையினரால் மீட்க்கப்பட்டனர்.
மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஏற்கனவே இந்த வழக்கில் தொடர்புள்ள அமுல் திவாகர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், மற்றொரு குற்றவாளியான கார்த்திக் குண்டர் தடுப்புச் சட்டம் மூலமாக கைது செய்யப்பட்டிருக்கிறார். அதற்கான உத்தரவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் வெளியிட்டுள்ளார்.
அவருடைய பரிந்துரையினடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் அந்த நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இந்த உத்தரவின் அடிப்படையில் கொலை வழக்கு குற்றவாளியான கார்த்திக்(27) என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைத்திருக்கின்றனர் காவல்துறையினர்.