fbpx

வரதட்சணை கொடுமை; பெண் குழந்தையை கொலை செய்ய சொல்லி மிரட்டல்… பெண் எடுத்த பரிதாப முடிவு..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் தஸ்தகீர் (27). இவரும், அதே பகுதியை சேர்ந்த பி.சி.ஏ. பட்டதாரியான அப்சா (23) இருவரும் காதலித்து, கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மூன்று மாத பெண் குழந்தை இருக்கிறது. அப்சாவை, அவரது கணவர் தஸ்தகீர், மாமனார் சையத் ஜிலானி, மாமியார் ஷிரின், கொழுந்தனார் ரப்பானி, நாத்தனார்கள் கவுசின், ஷாஜிதா மற்றும் ஷாஜிதாவின் கணவர் முஸ்தாக் ஆகியோர் ஒன்று சேர்ந்து வரதட்சணை கேட்டு துன்புறுத்தி, கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் மூன்று மாத பெண் குழந்தையை கொலை செய்ய சொல்லி மிரட்டியுள்ளனர்.

இதனால் அப்சா, தனது தாய் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை அப்சா தனது தாய் தவுலத்திடம் தண்ணீர் கேட்டார். பின்னர் சற்று நேரத்தில் மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அப்சா, விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

அப்சாவின் தாய் தவுலத் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கணவர் தஸ்தகீர், சையத் ஜிலானி, ஷிரின், ரப்பானி, கவுசின், ஷாஜிதா, முஸ்தாக் ஆகிய 7 பேர் மீது திருக்கோவிலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு முடிந்து அப்சாவின் உடலை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் அவரது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தது. திருக்கோவிலூர் தீயணைப்பு நிலையம் எதிரே வந்த போது அப்சாவின் உறவினர்கள் ஆம்புலன்சை வழிமறித்து சாலை மறியல் செய்தனர்.

அப்போது அப்சாவின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் திருக்கோவிலூர் துணை காவல் சூப்பிரண்டு பழனி தலைமையிலான காவல்துறையினர் விரைந்து வந்து அப்சாவின் உறவினர்களிடம் கலைந்து போகும்படி பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சம்பவத்துக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்வதாக உறுதியளித்த, பின்னர் அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில் அப்சா தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவர் எழுதி வைத்திருந்த நான்கு பக்க கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். அதில், திருமணமான கொஞ்ச நாட்களிலேயே கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினர்.

இதனிடையே எனக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை கொலை செய்ய சொல்லி கணவர் குடும்பத்தினர் என்னை மிரட்டினர். பெண் குழந்தையை பெற்றது என் குற்றமா. என் குழந்தையை கொல்ல எனக்கு விருப்பம் இல்லை. இந்த உலகில் என் குழந்தை வாழ வேண்டும். நான் சாகிறேன். எனது சாவுக்கு காரணமான கணவர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் விஷம் தின்றபடி(எலி பேஸ்ட்) வீடியோ பதிவிட்டு, அவர் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் பற்றி சொல்லியுள்ளார். அந்த வீடியோ மற்றும் நான்கு பக்க கடிதம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rupa

Next Post

சென்னை ரயில்வே பாதுகாப்பு படை பெண் போலீசுக்கு கத்திக்குத்து.. பரபரப்பு..!

Wed Aug 24 , 2022
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை பெண் போலீஸை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் தாம்பரம் நோக்கி புறப்பட்ட மின்சார ரயிலின், பெண்கள் பெட்டியில் ஏற முயன்ற ஆண் ஒருவரை கண்டித்ததால், ரயில்வே பாதுகாப்பு படை பெண் போலீஸ் ஆசிர்வாவை, ஆத்திரத்தில் மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை பெண் போலீஸ் ஆசிர்வாவுக்கு நெஞ்சுப்பகுதி, […]

You May Like