காவல்துறையில் உயர் அதிகாரிகளாக இருப்பவர்கள் அவர்களுக்கு கீழ் பணியாற்றும் காவல்துறையினரை தங்களுடைய வீட்டிற்கு பால் வாங்குவது, மற்ற எடுபிடி வேலைகளுக்கு பயன்படுத்துவது போன்ற சம்பவங்கள் சினிமாவில் மட்டும்தான் நடைபெறும் என்று நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் நிஜத்திலும் அதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இதன் காரணமாக பல காவலர்கள் மன உளைச்சலில் இருக்கிறார்கள். இருந்தாலும் தங்களுக்கு உயரதிகாரிகளாக இருப்பவர்களை பகைத்துக் கொண்டால் நாம் இந்த துறையில் வேலை பார்ப்பது கடினம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு, எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் காவலர்கள் ஏராளம்.
அந்த வகையில், பிஹார் தலைநகர் பாட்னாவில் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இந்த சம்பவத்தில் 4️ பெண் காவல்துறையினர் உட்பட 7 காவல்துறையினர் டிஎஸ்பி அளவிலான ஒரு உயர் அதிகாரி மற்ற காவல்துறை பணியாளர்களை மசாஜ் செய்யவும், துணி துவைக்கவும் கட்டாயப்படுத்தி வேலை வாங்குகிறார் என்று குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
இது குறித்து பாட்னாவின் மூத்த காவல்துறை கண்காணிப்பாளருக்கு புல்வாரிஷெரிப்பின் துணை பிரிவு காவல் துறை அதிகாரி சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை மசாஜ் செய்யவும், மற்றும் அவருடைய வீட்டில் தனிப்பட்ட முறையில் துணிகளை துவைக்கவும் சொல்கிறார் என்று புகார் வழங்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் குற்றம் சுமத்தப்பட்ட எஸ்.டி.பி.ஓ தங்களை அடிப்பதாகவும் அதற்கு மறுத்தால் பணியிடை நீக்கும் செய்து விடுவதாக மிரட்டுகிறார் என்றும் காவல்துறையினர் குற்றம் சாட்டுகின்றனர் இந்த சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.