தமிழகம் திராவிட கட்சிகளின் ஆட்சியில் பல்வேறு துறைகளில் 50 ஆண்டுகளாக பல வளர்ச்சிகளை கண்டிருந்தாலும் ஒரே ஒரு விடயத்தில் மட்டும் தமிழகம் பின்னோக்கி தான் சென்று கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
கேரள மாநிலத்தை பொருத்தவரையில் மது அந்த மாநிலத்தில் அறவே இருக்கக் கூடாது என அந்த மாநில சட்டசபையில் மதுவுக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
பின்பு இது தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிட்ட போது இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கை முடிவு ஆகவே இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று ஒரே போடாக போட்டுவிட்டது.
அப்படி ஒரு முடிவை தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆட்சியாளர்கள் ஏன் எடுக்க கூடாது? என்று பல சமயங்களில் பத்திரிகையாளர்களும், எதிர்க்கட்சியை சார்ந்தவர்களும் தமிழக அரசை கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி கானாகுந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெத்தநாயக்கர் (65) விவசாயியான இவருக்கு பாப்பம்மாள் என்ற மனைவியும், செல்வன் முருகன் (33) என்ற இரு மகன்களும் இருக்கின்றனர். செல்வனுக்கு திருமணமான நிலையில், அவர் சத்தியமங்கலம் அருகே இருக்கின்ற கெஞ்சனூர் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
பெத்த நாயகரின் 2வது மகன் முருகன் கூலி வேலை பார்த்து வருகிறார் இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதால் அவ்வப்போது தன்னுடைய தந்தை பெத்தநாயக்கரிடம் பணம் கேட்டு தகராறு செய்திருக்கிறார். அதோடு வீட்டை தனக்கு எழுதி கொடுக்குமாறு கேட்டும் சண்டையிட்டு வந்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
இந்த சூழ்நிலையில்தான் மது போதையில் இருந்த முருகன் தன்னுடைய தந்தை பெத்தநாயக்கரிடம் தகராறு செய்த காரணத்தால், இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்த கைகலப்பில் ஆத்திரம் அடைந்த பெத்தநாயக்கர் அருகில் கிடந்த மூங்கில் கட்டையை எடுத்து முருகனின் தலையில் தாக்கி இருக்கிறார் இதில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு, முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெத்தநாயக்கர் தன்னுடைய மகன் முருகனின் உடலை அருகே இருக்கின்ற தன்னுடைய விவசாயத் தோட்டத்தில் இருந்த சோளக்காட்டிற்குள் மறைத்து வைத்துவிட்டு வனப்பகுதிக்குள் சென்று தலைமறைவாகி விட்டார்.
இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் வழங்கிய புகாரினை அடிப்படையாகக் கொண்டு கடம்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோள காட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து வனப்பகுதிக்குள் சென்று தலைமறைவான பெத்த நாயக்கர் காவல்துறையினரால் தேடப்பட்டார். கடந்த சனிக்கிழமை காவல் நிலையத்தில் பெத்தநாயக்கர் சரணடைந்தார்.
அதன் பிறகு அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மாவட்ட சிறையில் அடைத்திருக்கிறார்கள்.