மைசூரு மாவட்டம் உன்சூர் டவுனில் வசித்து வருபவர் பீரேஸ்(23). அதே பகுதியை சேர்ந்தவர்கள் நிதின் மற்றும் அவரது நண்பர் மனு. இந்நிலையில் பீரேசுக்கும், நிதினுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பீரேஸ், நிதினை இன்ஸ்டாகிராமில் தகாத வார்த்தைகளால் திட்டி மெசேஜ் அனுப்பியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த நிதின், பீரேசை கொலை செய்ய திட்டம் போட்டுள்ளார். அதன்படி நேற்று முன்தினம், நிதின் மற்றும் அவரது நண்பர் மனு இரண்டு பேரும் சேர்ந்து பீரேசை சமாதானமாக பேசி, அவர்களது இருசக்கர வாகனத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அங்கு வைத்து பீரேசை, இரண்டு பேரும் அவர்கள் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டனர். இதையடுத்து கத்தியால் குத்துபட்டு காயம் அடைந்த பீரேசை, அப்பகுதியினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி பீரேஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்து உன்சூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில், இன்ஸ்டாகிராமில் தகாத வார்த்தைகளால் திட்டி மெசேஜ் அனுப்பியதால் பீரேசை, நிதின் மற்றும் அவரது நண்பர் மனு கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து உன்சூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இரண்டு பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.