விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாஜக சார்பாக மத்திய அரசின் நிதிநிலை சாதனை விளக்கப்பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெறுவதாக இருந்தது. ஆனாலும் இந்த கூட்டத்திற்கு காவல்துறையினர் தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை. இருந்தாலும் காவல்துறையினரின் தடையையும் மீறி பொதுக்கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச் ராஜா நேற்று மாலை காரின் மூலமாக திண்டிவனம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது பெரம்பலூர் மாவட்ட எல்லையான திருமாந்துறை சுங்கச்சாவடி பகுதியில் பயணம் செய்த போது அவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று தெரிவித்து கடலூர் மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர்.
அப்போது இந்த கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவருடன் வந்த பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்தவர்கள் சுமார் 30 பேர் திமுக அரசையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பி இருந்தார்கள் அதன் பிறகு கடலூர் மாவட்டம் தொழுதூர் காலநிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு சமுதாய கூடத்தில் எச் ராஜாவை காவல்துறையினர் தங்க வைத்தார்கள்.
முன்னதாக இது தொடர்பாக எச் ராஜா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது, நான் திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்தவர்கள் மிகவும் அநாகரீகமாக சுவரொட்டிகளை ஒட்டி இருந்தார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தொடர்ந்து இந்து மதத்தையும், இந்திய நாட்டையும் விரிவாக பேசி வருகின்றார் என்று கூறியிருக்கிறார்.
அதேபோல வட தமிழகத்தின் சுமார் 12 மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இனி நாள்தோறும் இந்த மாவட்டங்களுக்கு வருவோம் என்று தெரிவித்திருக்கிறார் எச் ராஜா.