கடந்த வாரம் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பின்பு தீவிர புயலாக உருமாறியது. அதன் பிறகு புயலாக வலுவிழந்தது. இந்த புயலுக்கு மாண்டஸ் புயல் என்று பெயரிடப்பட்டது.இதனைத் தொடர்ந்து கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. ஒரு சில இடங்களில் கனமழையும், சில பகுதிகளில் அதிகன மழையும் பெய்தது.
இதனைத் தொடர்ந்து இந்த மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இப்படியான சூழ்நிலையில், கிருஷ்ணகிரி, ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், கரூர், நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வட தமிழகம், புதுவை கடலோர பகுதிகளில் மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதிகளிலும் மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கிறது.
நாளை முதல் வரும் 14ஆம் தேதி வரையில் தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.தலைநகர் சென்னையில் 2 தினங்களுக்குப் பிறகு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
சென்ற 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் 25 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டம் மின்னல் மற்றும் பணப்பாக்கத்தில் 20 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.