நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சொந்த கணவரை கூலிப்படையை வைத்து கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலன் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கோழிக்கால் நத்தம் ஈஸ்வரன் நகரை சேர்ந்த எலக்ட்ரீசியனான தேவராஜன்(32). அவருடைய மனைவி சரண்யா(29) இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள்.
தேவராஜனுக்கு தொழில் ரீதியாக விமல்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் காரணமாக, தேவராஜின் வீட்டிற்கு விமல்குமார் அடிக்கடி சென்று வந்திருக்கிறார்.இதனால் தேவராஜ் மனைவி சரண்யாவிற்கும் விமல்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இந்த நிலையில் தான் கடந்த 19ஆம் தேதி வேலைக்காக வெளியே சென்ற தேவராஜ் ஒரு மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதோடு, இந்த படுகொலை சம்பந்தமாக காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர்.. அதன் பிறகு சந்தேகத்தின் அடிப்படையில் தேவராஜின் மனைவியிடம் காவல்துறையினர் கிடுக்கு பிடி விசாரணையை மேற்கொண்டனர். ஆனால் விசாரணையின்போது சரண்யா முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்திருக்கிறார். அதோடு சரண்யாவின் கைபேசிகளை ஆய்வு செய்தபோது, சரண்யா ஒரு ஆண் நண்பருடன் அடிக்கடி தொலைபேசியில் பேசியது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர்கள் பணியில் விசாரணை செய்த போது விமல்குமாருக்கும், தனக்கும் இடையே உள்ள கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கூலிப்படையை ஏவி கணவனை கொலை செய்ததாக சரண்யா ஒப்புதல் வாக்குமூலம் வழங்கினார். இந்த விவகாரம் குறித்து சரண்யாவின் கள்ளக்காதலனான விமல்குமார் கைது செய்யப்பட்டார்.
விமல்குமாரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அடிக்கடி சரண்யாவின் வீட்டிற்கு சென்று வந்த விமல்குமார் சரண்யா உடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் அவருடன் அடிக்கடி உல்லாசமாக இருந்ததாக தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரம் நாளடைவில் தேவராஜனுக்கு தெரிய வந்தது. ஆகவே அவருடைய மனைவி சரண்யா மற்றும் விமல்குமாரை அவர் கண்டித்து இருக்கிறார். ஆகவே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தேவராஜை கொலை செய்ய திட்டமிட்டோம் என்று விமல்குமார் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
ஆகவே அவரை கொலை செய்வதற்காக விமல்குமார் தன்னுடைய நண்பரான கோபாலகிருஷ்ணன்(27) என்பவரின் உதவியை நாடியதாகவும், தேவராஜ் 10 லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு செய்திருப்பதாகவும் அவர் உயிரிழந்து விட்டால் அதன் பிறகு வரும் பணத்தில் 2 லட்சம் ரூபாய் கொடுப்பதாகவும் தன்னுடைய நண்பரிடம் தெரிவித்ததாக விமல்குமார் வாக்குமூலம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து கோபாலகிருஷ்ணன் கூலிப்படையை ஏவி விட்டு தேவராஜனை கொலை செய்தது உறுதியானது. ஆகவே இருவரையும் காவல்துறையினர் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.