தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே டி.கள்ளுப்பட்டியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி செல்வி (45). இவர் கால்நடைகளுக்கு தேவையான புற்களை அறுத்து வழங்கும் வேலையை செய்து வந்தார் என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில்தான் அவர் வழக்கம் போல தன்னுடைய வேலைக்காக வட புதுப்பட்டி அழகர் கோவில் கரடு என்ற பகுதிக்கு சென்றுள்ளார்.
ஆனால் அவர் சென்று வெகு நேரமான பின்னரும் வீடு திரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, பதற்றம் அடைந்த அவருடைய குடும்பத்தினர், அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர். இதனை தொடர்ந்து செல்வியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், புல் அறுப்பதற்காக சென்ற மலை அடிவாரத்தில் தலையில் வெட்டு காயங்களுடன் அவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அவருடைய உடலை கைப்பற்றிய காவல்துறை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில், அந்த பெண் அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதற்கு நடுவே செல்விக்கும், சருத்துபட்டியைச் சேர்ந்த இருளப்பன் (60) என்ற முதியவருக்கும் கடந்த 4 வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.
ஆகவே காவல்துறையினர் இருளப்பனிடம் விசாரணை நடத்தியதில் தனக்கு காசநோய் உள்ளதால் தன்னுடன் செல்வி பேச மறுத்தார். ஆகவே அவரை கட்டையால் அடித்து கொலை செய்தேன் என்று ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.