இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த திரைப்படம் சிங்கம் 2, இந்த திரைப்படத்தில் தூத்துக்குடி கடல் வழியாக போதை பொருள் கடத்தும் கும்பலை கண்டுபிடித்து அவர்களை கைது செய்து தண்டனை வாங்கித் தருவார் போலீஸ் அதிகாரியான சூர்யா.
இது போன்ற சம்பவங்கள் எல்லாம் திரைப்படத்தில் தான் நடக்கும் என்று நாம் பார்த்திருப்போம், கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இது போன்ற ஒரு நம்ப முடியாத சம்பவம் நிஜ வாழ்விலும் தற்போது நடந்திருக்கிறது.
இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கும் அனைதினமும் கடத்தல் சம்பவங்கள் ராமநாதபுரம் மாவட்டம் கடலோரப் பகுதிகளில் நடந்து வருகின்றது என்று சொல்லப்படுகிறது. போதை பொருட்கள், கடல் அட்டைகள், நட்சத்திர ஆமைகள், உணவுப் பொருட்கள், உரம் போன்ற பொருட்கள் கடத்தப்படுவது வாடிக்கையாக நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், தற்சமயம் தங்க கட்டிகள் கடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது. இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் கடல் பகுதிக்கு நாட்டுப்படைகள் தங்க கட்டிகளை கடத்தி வருவதாக திருச்சி மத்திய புலனாய்வுத்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் ராமேஸ்வரம் அருகே இருக்கின்ற மண்டபம், உச்சிப்புளி, தொண்டி உள்ளிட்ட கடற்கரை பகுதியில் இந்திய கடலோர காவல் படைகள் மூலமாக சோதனை நடத்தப்பட்டது.
அப்படி சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அதிக திறனை கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்ட நாட்டு படகு ஒன்று இலங்கை சர்வதேச எல்லையில் இருந்து தமிழ்நாடு நோக்கி வருகை தந்து கொண்டு இருந்தது. இதனை ரேடார் மூலமாக கண்டுகொண்ட இந்திய கடலோர காவல் படையினர் நாட்டுப் படகை விரட்டிச் சென்றுள்ளனர். அப்போது படகுல இருந்த நபர்கள் ஒரு மூட்டையை நடு கடலில் வீசி உள்ளனர்.
இதனை தொடர்ந்து, நாட்டுப் படகை துரத்தி சென்று பிடித்த இந்திய கடலோர காவல் படையினர் மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது நாட்டுப்படகில் இருந்து தூக்கி வீசியது என்ன பொருள்? என்று அவர்களிடம் கேள்வி எழுப்பியபோது, அவர்கள் அதற்கு சரியான பதில் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
முதலில் எதையும் நாங்கள் தூக்கி வீசவில்லை என்று தெரிவித்த அந்த நபர்கள், அதன்பிறகு மீண்டும் மீன்பிடி வலையை வீசினோம் என்று தெரிவித்துள்ளனர். ஆகவே சந்தேகம் அடைந்த கடலோர காவல் படையினர் ஸ்கூபா டிரைவிங் வீரர்கள் உதவியுடன் இந்திய கடற்படை அதிகாரிகள் நேற்று முன்தினம் முதல் அந்த பொருளை தீவிரமாக தேடி வந்தனர். நேற்று முன்தினம் இரவு நேரம் நெருங்கி விட்டதால் தேடும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து, நேற்று காலை மறுபடியும் தேடும் பணியை கடலோர காவல் படையினர் முன்னெடுத்தனர் அந்த சமயத்தில் கடலில் வீசப்பட்ட 12 கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர் அதன் மதிப்பு சர்வதேச சந்தையில் 7.5 கோடியாக இருக்கும் என்று தெரிய வந்திருக்கிறது.