கோவை மாவட்டம் கோவில் பாளையத்தை அடுத்துள்ள கீரனத்தம் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன் (50). இவர் தனியார் ஐடி நிறுவனத்தில் தோட்டப்பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சந்திரா (45) இந்த தம்பதிகளுக்கு குருநாதன்(30) என்ற மகன் இருக்கிறார்.
இத்தகைய சூழ்நிலையில், குருநாதனுக்கு திருமணம் நடந்து சில மாதங்களிலேயே அவர் தன்னுடைய மனைவியை விட்டு பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆகவே அவர் தாய் தந்தையினருடன் வசித்து வருகிறார். மேலும் குருநாதன் எந்தவித வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக சொல்லப்படுகிறது இத்தகைய சூழ்நிலையில், தந்தை கர்ணனும் மகன் குருநாதன் இணைந்து அந்தப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்து இருக்கிறார்கள், அதன் பிறகு வீடு திரும்பி இருக்கிறார்கள்.
அப்போது கர்ணன் குருநாதனிடம் மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று அறிவுரை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் கொண்ட குருநாதன் அரிவாளால் கர்ணனின் தலை மற்றும் முகம் போன்ற பகுதிகளில் பலமாக வெட்டியதாக சொல்லப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக அறிந்து கொண்ட கோவில்பாளையம் காவல்துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்த கர்ணனை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதோடு இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தந்தையை வெட்டிய மகன் குருநாதனை கைது செய்தனர் ஆகவே அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்திருக்கிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது