அரசியல்வாதிகள் ஏதாவது சாதனை படைத்தால் அதனை பெரிய அளவில் விழாவாக எடுத்து கொண்டாடுவார்கள். அல்லது யாராவது ஒருவர் 100 வயது வரையில் உயிருடன் இருந்தால் அவர்களுக்கு ஒரு விழாவை எடுத்து அவருடைய வாரிசுகள் கொண்டாடுவார்கள்.
ஆனால் வடிவேலு ஒரு திரைப்படத்தில் திருடுவதற்காக செல்லும் போது அவருடன் இருக்கும் அவருடைய கூட்டாளிகள் அவர் 100வது திருட்டை செய்யப் போவதாக போஸ்டர் அடித்து திருவெங்கிலும் ஒட்டி அமர்க்களம் படுத்தியிருப்பார்கள்.அப்படி ஒரு சம்பவம் கோவையில் தற்போது நடைபெற்று உள்ளது என்ன ஒரு வித்தியாசம் என்றால் இந்த செயலுக்கு போஸ்டர் மட்டும்தான் அடிக்கவில்லை.
கோவை குனியமுத்தூரிலிருந்து ஒப்பனக்கார வீதியை நோக்கி கடந்த 15ஆம் தேதி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. பிரகாசம் பேருந்து நிலையத்திற்கு அருகில் அந்த பேருந்து நின்றபோது குனியமுத்துரைச் சேர்ந்த சபீர் அகமது என்ற பயணியின் 30000 மதிப்புள்ள ஒரு செல்போன் திருடு போனது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த மற்றொரு பயணி அந்த செல்போனை திருடிக் கொண்டு கீழே இறங்கி தப்பி செல்ல முயற்சி செய்தார்.
பிரகாசம் பேருந்து நிறுத்தம் பகுதியில் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மாரிமுத்து, உமா மற்றும் சக காவலர்கள் உள்ளிட்டோர் செல்போனை திருடிவிட்டு தப்பிக்க முயற்சி செய்த நபரை மடக்கி பிடித்தனர். காவல்துறையினரின் விசாரணையில் பிடிபட்ட அந்த நபர் செம்பட்டி காலணியை சேர்ந்த ஆறுமுகம் என்ற போண்டா ஆறுமுகம்(55) என்ற விவரம் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிடிபட்ட ஆறுமுகம் சுமார் 40 ஆண்டு காலமாக அதாவது, தன்னுடைய 14 வயதிலிருந்து பிக்பாக்கெட் உள்ளிட்ட திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு முறையும் திருட்டில் ஈடுபடுவதும், அதன் பிறகு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று சில வாரங்கள் இருப்பதும் அதன் பிறகு ஜாமினில் வெளியே வந்தவுடன் மறுபடியும் திருட்டில் ஈடுபடுவதையும் அவர் வாடிக்கையாக கொண்டு இருக்கிறார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது.
இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரு குழந்தைகள் இருக்கின்றன. போண்டா திருடி மாட்டிக் கொண்டதால் இவர் போண்டா ஆறுமுகம் என்று பெயர் பெற்றார் என்றும் சொல்லப்படுகிறது. இதுவரையில் 99 முறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள இவர், திருட்டில் ஈடுபட்டு 100வது முறையாக கைதாகி உள்ளதாக அவரே தன் வாயால் தெரிவித்துள்ளார்.
ஆனால் காவல்துறையினரின் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் கோவை மாநகரில் மட்டும் அவர் மீது 72 பிக்பாக்கெட் வழக்குகள் இருக்கின்றன. ஆனாலும் சிறு வயதிலிருந்து திருட்டில் ஈடுபட்டு வந்ததன் காரணமாக, 100வது முறையாக அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று தெரிவிப்பது நம்பும்படியாக தான் இருக்கிறது என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக காவல்துறையினர் மேலும் தெரிவித்ததாவது, ஆறுமுகம் எந்த வேலைக்கும் செல்வதில்லை. சிறு, சிறு திருட்டில் ஈடுபட்டு கைதாவதை அவர் வழக்கமாக வைத்திருக்கிறார். தற்சமயம் 100வது முறையாக கைதாகி இருக்கின்றார். திருடிய பணத்தை ஜீபே உள்ளிட்ட இணையதள பரிமாற்ற செயலைகள் மூலமாக தன்னுடைய மனைவிக்கு அனுப்பி வைத்திருக்கிறார் தற்சமயம் ஆறுமுகம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார்.