இந்தியா, பாகிஸ்தான் அணிகள் கிரிக்கெட் போட்டி என்றால் இன்றளவும் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படும்.கிரிக்கெட்டை பொருத்தவரையில் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்ந்துவரும் ஆஸ்திரேலியா அணியுடன் இந்தியா விளையாடி வெற்றி பெற்றால் கூட ரசிகர்களிடையே அப்படி பெரிய அளவில் மகிழ்ச்சி இருக்காது.
ஆனால் பாகிஸ்தான் உடன் மோதி இந்திய அணி வெற்றி பெற்றால் இந்திய ரசிகர்கள் குதூகலத்தில் கூத்தாடுவார்கள். என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு பாகிஸ்தான் என்றால் இந்திய ரசிகர்களிடையே போட்டி அதிகரிக்கிறது.
இந்த நிலையில், மிக விரைவில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது அந்த போட்டியில் 6 அணிகள் பங்கேற்க்கிறது. நடைபெறவிருக்கும் 16 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் நாட்டில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது. ஆனாலும் இரு நாடுகளுக்கு இடையில் நல்லுறவு இல்லாததால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று அந்த விளையாட்டில் பங்கேற்க முடியாது.
அதற்கு பதிலாக இந்த விளையாட்டுப் போட்டி பொதுவான ஒரு இடத்திற்கு மாற்றப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சங்கத் தலைவருமான ஜெய்ஷா அறிவித்தார். இதற்கு பாகிஸ்தான் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது.
பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் ஆசிய கிரிக்கெட் தொடரில் இருந்து இந்தியா வெளியேறினால் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்காது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் எச்சரித்ததாக தகவல் கிடைத்திருக்கிறது.
இதனையடுத்து போட்டி நடைபெறும் இடம் தொடர்பாக விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. மேலும் இந்த முடிவை எடுப்பதற்காக பக்ரைனில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் எந்த விதமான முடிவும் மேற்கொள்ளப்படவில்லை. அதே சமயத்தில் பாகிஸ்தானில் இருந்து இந்த போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்ற திட்டமிடப்பட இருப்பதாக தகவல் கிடைத்திருக்கின்றன போட்டி நடைபெறும் இடம் தொடர்பாக அடுத்த மாதம் மீண்டும் விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், இந்த விவகாரம் குறித்து தன்னுடைய யூடியூப் சேனலில் பேசி உள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறிய வயதிலிருந்து எங்க வீட்டிற்கு நீ வர மாட்ட அதனால நான் உங்க வீட்டுக்கு வரமாட்டேன் என்று சொல்லுவோம்.
அதே மாதிரி தான் இங்க என்ன நடக்குதுன்னா பாகிஸ்தான் நாங்களும் உலக கோப்பைக்கு வர மாட்டோம் அப்படின்னு சொல்லி இருக்காங்க. ஆனாலும் அது நடக்காது என்று நான் நினைக்கிறேன். கடைசியா எங்க நடக்கும்னு பார்த்தீங்கன்னா துபாய் இல்லன்னா ஸ்ரீலங்காவில் தான் நடக்கும். ஸ்ரீலங்காவுல நடந்தா நான் சந்தோஷப்படுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.